டெல்லி: அணித் தலைவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பளு தூக்கும் அணி வீரர்கள் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகப் போவதாக மிரட்டினர். பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவின்போது பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏந்தி வருவது தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாம்.
மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பளு தூக்கும் வீரர் சுஜாவுதீன் மாலிக்தான் முதலில் தேசியக் கொடியை ஏந்தி வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பாகிஸ்தான் நாட்டுக் அணிகளுக்கான தலைவரான முகம்மது அலி ஷா கடைசி நேரத்தில் பிளானை மாற்றி தானே கொடியை தூக்கிக் கொண்டு கிளம்பினார்.
இதனால் பளு தூக்கும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஷேக் ரஷீத் கூறுகையில், அணி வீரர்கள் அனைவரும் கடும் அதிருப்தி அடைந்து விட்டனர். போட்டியில் பங்கேற்க விருப்பமில்லை என்றும் கூறினர். ஷா மன்னிப்பு கேட்டால்தான் போட்டியி்ல் பங்கேற்போம் என்றும் கூறி விட்டனர் என்றார்.
இதையடுத்து முகம்மது அலி ஷா தலையிட்டு சமரசப்படுத்தினார். இதையடுத்து வீரர்கள் சமாதானமடைந்து விட்டதாக ஷாவே தெரிவித்தார்.