இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. காமன்வெல்த் பளுதூக்குதலில் ரிஷிகன்டா சிங் சாதனை
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடரில் ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்திய வீரர் ரிஷிகன்டா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய அணி வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். மொத்தம் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பளுதூக்குதல் வீரரான ரிஷிகன்டா சிங், போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 143 கிலோ எடையையும் தூக்கினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 264 கிலோ எடையை தூக்கிய அவர் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தனது கடைசி கிளீன் அண்ட் ஜெர்க் முயற்சியில் 151 கிலோ எடையைத் தூக்க முயன்று தவறவிட்டபோதிலும், அவரது ஒட்டுமொத்தப் புள்ளிகள் அவருக்குப் பதக்கத்தை உறுதி செய்தன.

இந்தப் போட்டியில் மலேசியாவின் முகமது அனிக் ஒட்டுமொத்தமாக 273 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார். இவர் தூக்கிய 273 கிலோ எடையானது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் புதிய சாதனையாகப் பதிவானது. கென்யாவின் ஜோஷுவா அமுங்கா எம்போயா தனது கடைசி கிளீன் அண்ட் ஜெர்க் முயற்சியில் 145 கிலோவைத் தூக்கி, ஒட்டுமொத்தமாக 260 கிலோவுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ள மணிப்பூர் வீரர் ரிஷிகன்டா சிங்கிற்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். எடைதூக்குதலில் கிடைத்துள்ள இந்த வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
