CWG 2026: பளுதூக்குதலில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழக வீரர்.. யார் இந்த முத்துப்பாண்டி?
கிளாஸ்கோ: காமன்வெல்த் 2026 போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இது இந்தியா வென்ற 4வது பதக்கமாகும். முத்துப்பாண்டி என்ற கில்லி வில்லன் பெயரை பெற்று இருந்தாலும், தற்போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஹீரோவாக மாறி இருக்கிறார்.
முத்துப்பாண்டி வாழ்க்கையில் காயம் பல தடைகளை ஏற்படுத்தியது. எனினும், அதிலிருந்து மீண்டு வந்து இன்று சாதித்துள்ளார். முத்துப்பாண்டியின் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் பதிவாகும் முதல் பதக்கம் இதுவாகும். கோவில்பட்டியைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு 2018-ல் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 62 கிலோ பிரிவில் பங்கேற்று, 266 கிலோ எடையுடன் 6-வது இடத்தையே பிடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான முழங்கை காயம் அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு, 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் தொடரிலும் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கியது. எனினும் கொஞ்சம் கூட மனம் தளராத முத்துப்பாண்டி என் நாட்டிற்கு ஒரு பதக்கமாவது வாங்கி தருவேன் என்று வெறிகொண்டு உழைத்தார்.
காயத்திலிருந்து அவர் மீண்டெழுந்த விதம் அனைவரையும் வியப்படைய செய்தது. 2025 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்ற அவர், அதே ஆண்டின் உலக சாம்பியன்ஷிப்பில் தனது தனிப்பட்ட சிறந்த செயல்பாடான 299 கிலோவைக் கடந்து 9-வது இடத்தைப் பிடித்தார். மேலும், 2026 சீனியர் தேசிய போட்டிகளில் 302 கிலோ எடை தூக்கி தேசியப் பட்டத்தையும் வென்றிருந்தார்.
கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் வலுவானவராகக் கருதப்படும் முத்துப்பாண்டி, இந்தியாவின் முக்கியப் பதக்க நம்பிக்கையாகவே கிளாஸ்கோ போட்டிகளுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெள்ளிப் பதக்க வெற்றிக்கு முன்பாகவே, நான்காம் நாளில் இந்தியாவின் பிற பளுதூக்குதல் வீரர்கள் அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்திருந்தனர். மகளிர்கான 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
அதேபோல, ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் ரிஷிகாந்தா சிங் ஸ்னாட்ச் முறையில் காமன்வெல்த் சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இந்த மூன்று அடுத்தடுத்த பதக்கங்கள் கிளாஸ்கோவில் இந்திய அணியின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications

