காலிறுதியில் "வித்தை" காட்டத் தவறிய இந்தியா.. பறிபோன பொன்னான மெடல் வாய்ப்பு
டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கிய நிலையில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலையிலேயே ஒரு கோல்டு மெடலை வென்று அசத்தியுள்ளது சீனா. இந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கம் இதுதான்.
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றுள்ளார் சீன வீராங்கனை யாங் கியான். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தான் அவர் தங்கம் வென்றார்.

வெற்றியும், தோல்வியும்
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய ஆண்கள் அணி வீழ்த்தியது, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் தான் இந்திய அணியின் சிறப்பான தருணங்களாக அமைந்துள்ளது. எனினும், இன்று காலை நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் சீன தைபே அணியை - இந்திய அணி எதிர்கொண்டது. இதில், முதல் இரண்டு சுற்றில் இந்தியா 2 - 0 என்று பின்தங்கியிருந்தது.

காலிறுதிக்கு தகுதி
இந்தியாவின் கதை முடிந்தது என்று பார்வையாளர்கள் நினைத்திருக்க, பிரவீன் எய்திய அம்புகள் ஒவ்வொன்றும் புள்ளிகளை குவித்தன. தீபிகாவும் பக்கபலமாக புள்ளிகளை சேகரிக்க, இந்திய அணி சறுக்கலில் இருந்து மீண்டு வந்தது. முடிவில், 5 - 3 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம், காலிறுதிப் போட்டிக்கு இந்த இணை முன்னேறியது.

முடிந்த மெடல் கனவு
இதனால், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காலிறுதிப் போட்டி தொடங்கியது. இதில், கொரிய அணியுடன் இந்தியா மோதியது. ஆனால், 2- 6 என்ற கணக்கில் தீபிகா - பிரவீன் ஜோடி தோற்று வெளியேறியது. இதன் மூலம், வில்வித்தை விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவு மெடல் கனவு முடிவுக்கு வந்தது.

அதிருப்தி
இந்தியா நிச்சயம் மெடல் வெல்லும் என்று எதிர்பார்த்த விளையாட்டில் முக்கியமானது வில்வித்தை. ஆனால், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோற்றிருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய ஒலிம்பிக் சம்மேளனமும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications