7 மாத கர்ப்பம் தடையல்ல.. 145 கிலோ எடை தூக்கி பதக்கம் வென்ற டெல்லி பெண் காவலர் சோனிகா யாதவ்
டெல்லி: "மனதில் உறுதி இருந்தால், முடியாதது எதுவும் இல்லை" என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்துள்ளார் டெல்லி பெண் காவலர் சோனிகா யாதவ். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு, 145 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 'அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் கிளஸ்டர் 2025-26' போட்டியில், டெல்லி காவலர் சோனிகா யாதவ் மேடை ஏறியபோது, பலருக்கும் ஒருவித பதற்றம் இருந்தது. அவர் ஏழு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று இருந்தார். மேலும், 145 கிலோ எடையை அவர் தூக்க முடியுமா? என்ற கேள்வியும் இருந்தது.

சோனிகா தனது எடைப் பிரிவை மாற்றிக்கொண்டு போட்டியில் பங்கேற்கிறார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவர் 145 கிலோ எடை கொண்ட 'டெட்லிஃப்ட்' பிரிவில் அசால்டாக எடையைத் தூக்கியபோது, அரங்கமே ஒரு கணம் அதிர்ந்தது.
கடந்த மே மாதம் தான் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்ததும், உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லமாட்டார் என்று தனது கணவர் நினைத்ததாகவும், ஆனாலும் தனது பயிற்சியை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதை தொடர்ந்ததகவும் சோனிகா கூறினார். கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அந்தத் தைரியமே தனக்கு இந்தப் பதக்கத்தை வென்று தந்தது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தப் போட்டியில், அவர் ஸ்குவாட் பிரிவில் 125 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில் 80 கிலோ, மற்றும் டெட்லிஃப்ட் பிரிவில் 145 கிலோ என எடைகளைத் தூக்கி அசத்தியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் பளுதூக்குவது குறித்து இணையத்தில் ஆய்வு செய்தபோது, லூசி மார்ட்டின்ஸ் என்ற பெண் இதே போன்று செய்ததை அறிந்து கொண்டதாகச் சோனிகா தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்டாகிராம் மூலம் லூசியைத் தொடர்பு கொண்டு, அவரிடம் இருந்து பயிற்சி ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். அதே சமயம், தனது மருத்துவரின் ஆலோசனையை ஒவ்வொரு கட்டத்திலும் பெற்று, குழந்தைக்கும் தனக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டே பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
போட்டியின்போது, அவர் கர்ப்பமாக இருப்பது யாருக்கும் தெரியவில்லை. அவர் தளர்வான உடைகள் அணிந்திருந்ததால், யாரும் சந்தேகிக்கவில்லை. பெஞ்ச் பிரஸ் செய்து முடித்ததும் அவரது கணவர் அவரைத் தூக்கிவிட்டபோதுகூட, பார்வையாளர்கள் அதைச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டனர்.
ஆனால், உண்மை தெரிந்ததும், அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண் காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சோனிகா யாதவ், 2014-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த காவலர். தற்போது சமூகக் காவல் பிரிவில் (Community Policing Cell) பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, மஜ்னு கா திலா பகுதியில் பீட் அதிகாரியாகப் பணியாற்றியபோது, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக அவர் ஆற்றிய பணி பெரிதும் பாராட்டப்பட்டது.
அவரது சிறப்பான பணிக்காக, 2022-ல் டெல்லி காவல்துறை ஆணையரால் கௌரவிக்கப்பட்டார். மகளிர் தினத்தன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் அவரது சாதனைகளைப் பாராட்டியுள்ளார். சோனிகாவின் கணவர் அங்கூர் பானா, தனியார் துறையில் பணிபுரிகிறார்.
கபடி வீராங்கனையாக தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கிய சோனிகா, பின்னர் ஜிம்மில் பளுதூக்கும்போதுதான் தனது உண்மையான பலத்தைக் கண்டறிந்துள்ளார். 2023-ல் நடைபெற்ற டெல்லி மாநில பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் பயணத்தில் ஒரு பகுதிதானே தவிர, அது அவர்களின் கனவுகளுக்கும், திறமைகளுக்கும் ஒருபோதும் தடையாக இருக்காது என்பதைச் சோனிகா யாதவ் தனது அசாத்திய மன உறுதியால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications