ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலமாக 2வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற 4வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இருந்தாலும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் நீரஜ் சோப்ராவால் 90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிய முடியாததும் சில விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த 2 வாரத்திற்குள் அடுத்த போட்டிக்கு நீரஜ் சோப்ரா தயாராகினார். லுசானே டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இதில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் 82.10 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்தார்.

இதன்பின் கிடைத்த 2வது வாய்ப்பில் 83.21 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 4வது இடத்தில் இருந்தார். பின்னர் கிடைத்த 3வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 83.13 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார். இவரை விடவும் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.49 மீட்டர் தூரம் வீசி முதலிடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.08 மீட்டர் தூரம் வீசி 2வது இடத்திலும், உக்ரைனைச் சேர்ந்த ஆர்தர் 83.38 மீட்டர் தூரம் வீசி 3வது இடத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 4வது வாய்ப்பில் இநெதியாவின் நீரஜ் சோப்ரா 82.34 மீட்டர் தூரம் மட்டும் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் நீரஜ் சோப்ரா இன்னும் ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே மீதமிருந்தது. அதில் டாப் 3 இடங்களை பிடிக்கவில்லை என்றால், அவருக்கு 6 முறை வீசுவதற்கான வாய்ப்பு கிடைக்காது. இந்த நிலையில் 5வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 85.58 மீட்டர் தூரம் வீசி டாப் 3 இடங்களுக்குள் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடைசி வாய்ப்பில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஆச்சரியம் கொடுத்தார். இதனால் நீரஜ் சோப்ரா தனது கடைசி வாய்ப்பில் 90 மீட்டர் தூரத்தை எட்டி சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடைசி வாய்ப்பில் நீரஜ் சோப்ரா ஈட்டியை எறிந்து விட்டு ஆக்ரோஷமான சத்தத்தை எழுப்பினார்.
அவர் வீசிய ஈட்டி 89.49 மீட்டர் தூரம் சென்றது. இதன் மூலமாக டைமண்ட் லீக் தொடரிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கப் பதக்கத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ் கைப்பற்றினார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் தொடரிலேயே நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் தான் வீசியிருந்தார்.
தற்போது அதனை விடவும் அதிக தூரம் வீசி மீண்டும் வெள்ளியை கைப்பற்றியுள்ளார். அவரின் சிறந்த செயல்பாடாக 89.94 மீட்டர் தூரம் உள்ளது. அதனை அடுத்தடுத்த போட்டிகளில் முறியடித்து 90 மீட்டர் தூரம் என்ற கனவை எட்டிப்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. அதேபோல் 2018ஆம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்கு பின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் டாப் 3ல் முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.