பெங்களூர் : நடுவரிடும் வாதிட்டதாலும், தொடர்ந்து அவுட் கேட்டதாலும், தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் திணேஷ் கார்த்திக் ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஒரு போட்டிக்கான கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் தமிழக அணிக்கும், குஜராத் அணிக்கும் இடையிலான ரஞ்சி போட்டி நடந்தது. இந்தப் போட்டியின்போது குஜராத் அணிக்கு தொடர்ந்து அவர் அவுட் கேட்டு வந்தார். மேலும் நடுவரைக் குறை கூறும் வகையிலும் பேசியதாக போட்டி நடுவர் சஞ்சய் பாட்டீல், புகார் அளித்தார்.
இதையடுத்து அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடையும், 75 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
இந்தத் தடை காரணமாக 17ம் தேதி அமிர்தசரஸில் தொடங்கும் பஞ்சாப் அணியுடனான போட்டியில் திணேஷ் கார்த்திக் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் அணியுடனான போட்டியின்போது குஜராத் பேட்ஸ்மேன் ஜெய் தேசாய் 68 ரன்கள் எடுத்திருந்தபோது தமிழக பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய பந்தை தேசாய் அடித்து அதை கார்த்திக் பிடித்தார். ஆனால் அது அவுட் இல்லை என்று நடுவர் கூறி விட்டார். இருப்பினும் விடாமல் அவுட் கோரியும், நடுவருடன் வாதிட்டபடியும் இருந்தார் கார்த்திக்.
தொடர்ந்து விளையாடிய தேசாய் 108 ரன்களைக் குவித்தார். போட்டியும் டிராவில் முடிந்தது.