2 செ.மீ.இல் முதல் இடத்தை தவறவிட்ட தங்க நாயகன் நீரஜ் சோப்ரா.. தோஹா டயமன்ட் லீக்கில் ஏமாற்றம்
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் தொடர் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் முதல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடம் மட்டுமே பிடித்தார்.
இந்த போட்டியில் இரண்டு சென்டிமீட்டர் அளவில் முதலிடத்தை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா. செக் குடியரசை சேர்ந்த ஜக்குப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்த முயற்சி செய்த நீரஜ் சோப்ரா தனது கடைசி எறிதலின் போது 88.36 மீட்டர் தூரத்திற்கு வீசினார். அதுவே இந்தப் போட்டியில் அவரின் சிறந்த பதிவாக இருந்தது.

இதன் மூலம் இரண்டு சென்டிமீட்டர் அளவில் முதலிடத்தை நீர சோப்ரா தவற விட்டார். இந்த போட்டிக்கு பின் அவர் பேசுகையில் இரண்டாவது இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
“நான் 88க்கு மேல் வீசியதை நன்றாக உணர்ந்தேன். இந்த முடிவில் நான் திருப்தி அடைகிறேன். ஆனால் என் முயற்சியில் திருப்தி இல்லை. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில், நான் வெகுதூரம் வீசுவேன்”என்று நீரஜ் சோப்ரா கூறினார்.
"இன்று நான் அதை (90 மீட்டர் தூரம் வீசுவதை) செய்ய முடியும் என்று உணர்ந்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. ஒருவேளை நான் அதை வேறு எங்காவது செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என நினைக்கிறேன். எனது நிலையான செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் விரைவில் 90 மீட்டருக்கு மேல் எறிவேன்” என்று அவர் கூறினார்.
2016, 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் டயமண்ட் லீக்கில் மூன்று முறை முதல் இடத்தைப் பிடித்த ஜக்குப்பைப் பற்றியும் அவர் பாராட்டினார். “ஜக்குப்புடன் போட்டியிடுவது எப்போதும் சிறப்பானது. அவர் ஒரு நல்ல நண்பர், நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்,” என்று நீரஜ் சோப்ரா கூறினார்.


Click it and Unblock the Notifications