டெல்லி: இந்திய வீரர்களை தோல்விக்காக தூற்றுவதை விட்டு விட்டு தென் ஆப்பிரிக்காவைப் பாராட்ட வேண்டும். இந்தியாவின் நாக்பூர் டெஸ்ட் தோல்விக்காக என்னை தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து தூக்கினாலும் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.
நாக்பூர் டெஸ்ட்டில் இந்தியா படு மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஷேவாக், சச்சின் ஆகியோர் சதங்கள் போட்ட நிலையிலும் கூட இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா தோற்றிருப்பது ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது. அதை விட முக்கியமாக, நம்பர் ஒன் இடத்திற்கு நாங்களே பொருத்தமானவர்கள் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் கூறியிருப்பதால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,
லட்சுமணுக்கு மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா ஆட்டம் தொடங்க 15 நிமிடங்கள் இருக்கையில் காயம் அடைந்தார்.
அதனால், வேறு வழியில்லாமல் மாற்று விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா அணியில் சேர்க்கப்பட்டார். சுமாராக பேட் செய்யக் கூடிய அவர், இந்த ஆட்டத்தில் சிறப்பாகவே விளையாடினார்.
ரோஹித் சர்மா எதிர்பாராதவிதமாக காயம் அடைந்ததற்கு தேர்வு குழுவை குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. ரோஹித் சர்மா விளையாடியிருந்தால் தேர்வுக் குழுவை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். இதை விதி என்றுதான் கூற வேண்டும். இருப்பினும், தேர்வுக் குழு தலைவர் என்ற முறையில் நான் பொறுப்பேற்கிறேன்.
லட்சுமண் 100 சதவீதம் உடற் தகுதி இல்லாத நிலையில் அவர் உடற்தகுதி பெற்றுவிடுவார் என நினைத்து அணியில் சேர்த்துக் கொண்டோம். இது ஓர் அனுபவம் ஆகும். இனி 100 சதவீத உடற்தகுதி இல்லாத வீரர்களை சேர்த்துக் கொள்ளமாட்டோம்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு தனிப்பட்ட வீரரை குறை சொல்வது பொருத்தமல்ல. நீங்கள் தேர்வுக் குழுவை குறை கூறலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அணி வென்றிருந்தால் குறைகளைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். தோல்வி அடைந்தவுடன் அணித் தேர்வு சரியில்லை என அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். நாக்பூர் டெஸ்டில் தோற்றுள்ள போதும், கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
வெற்றி, தோல்வி விளையாட்டில் இயல்பானது. இருப்பினும், கொல்கத்தா டெஸ்டுக்குள் லட்சுமண் தயாராகி விடுவார் என்பதால் இந்தியா மீண்டு எழும்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினர். ஸ்டெயின் மிக அபாரமாகப் பந்துவீசினார். மற்றவர்களை குறைகூறுவதை விடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.