Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது ஈடன் கார்டன்

Eden Gardens Kolkata
கொல்கத்தா: பிரசித்தி பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

இங்கு இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த காலத்திற்குள் மைதானத்தைப் புதுப்பிக்கும் பணியை முடிக்காததால், ஈடன் கார்டன் மைதானத்தை, போட்டி மைதானப் பட்டியலிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டி நீக்கி விட்டது.

இந்த மைதானத்தில் பிப்ரவரி 27ம் தேதி இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெறுவதாக இருந்தது. தற்போது ஐசிசி இந்த மைதானத்தை நிராகரித்து விட்டதால், வேறு மைதானத்திற்குப் போட்டியை மாற்றவுள்ளனர்.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டி இயக்குநர், மத்திய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், ஐசிசி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு போட்டியை நடத்தவுள்ள ஐந்து மைதானங்கள் குறித்த அறிக்கையை அளித்துள்ளது. அதில், இலங்கையில் உள்ள மூன்று மைதானங்கள் (கொழும்பு, ஹம்பந்தோட்டா, பல்லகலே) ஆகியவையும், மும்பை வாங்கடே மைதானமும் போட்டியை நடத்தும் தகுதியுடன் இருப்பதால் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மைதானங்களில் சிறிய அளவிலான முடிக்கும் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. அவற்றையும் கூட இன்னும் 14 நாட்களுக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடையவில்லை. இதனால் அந்த மைதானம் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் கங்குலியை யாரும் எடுக்காததால் கொல்கத்தா கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கடுப்பில் உள்ளனர். இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டியும் நடைபெறாது என்ற தகவலால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புகழ் பெற்ற நிகழ்வுகளும்- கலாட்டாக்களும்

இந்தியாவிலேயே மிகப் பெரிய மைதானம் ஈடன் கார்டன் மைதானம்தான். அத்தோடு உலகிலேயே 2வது மிகப் பெரிய ஸ்டேடியமும் கூட. ஈடன் கார்டன் மைதானத்தில் பல புகழ் பெற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன- கலாட்டாக்களும்.

1966-67ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கு ஆடியபோதும், 1969-70ல் ஆஸ்திரேலிய ஆடியபோதும் பெரும் கலவரம் மூண்டது.

1987ம் ஆண்டு இங்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடந்தது. அதில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

1996ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியபோது, இங்கு அரை இறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இந்தியா தோல்வியுறும் நிலையில் இருந்ததால் ரசிகர்கள் பெரும் கலவரத்தில் குதித்தனர். ஸ்டேடியத்தில் தீயும் வைக்கப்பட்டது. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டது.

1999ம் ஆண்டு நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் ரன் அவுட் ஆனார். ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வேண்டுமென்றே தடுத்ததால்தான் சச்சின் ரன் அவுட் ஆனார் என்று நினைத்து ரசிகர்கள் பெரும் கலவரத்தில் குதித்தனர். இதையடுத்து ரசிகர்கள் அனைவரையும் வெளியேற்றிய பின்னர் யாருமே இல்லாத சூழலில் போட்டி மட்டும் தொடர்ந்து நடந்தது.

1991ல் இங்கு நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக கபில் தேவ் ஹாட்ரிக் விக்கெட்களைப் பறித்தார். அதுதான் ஒரு நாள் போட்டியில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் சாதனையாகும். மேலும் ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் பெற்ற முதல் வீரரும் கபில் தேவே.

இதே மைதானத்தில் 2000-01ல் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் பெற்று, கபில் தேவுக்கு அடுத்து அந்த சாதனையைப் புரிந்த இந்திய வீரராக உயர்ந்தார்.

இந்த மைதானத்தில் அதிகம் எடுக்கப்பட்ட ரன் வி.வி.எஸ்.லட்சுமண் எடுத்த 281 ரன்களே ஆகும்.

இப்படி பல முக்கிய சம்பவங்களை சந்தித்துள்ள ஈடன் கார்டன் மைதானம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் வரைபடத்தில் இடம் பெறாமல் போயிருப்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+