மும்பை : ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்வது வழக்கம். ஆனால் தற்போது இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இதில் குறிப்பாக மனித் அரோரா என்ற மருத்துவர் இந்திய விளையாட்டு உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கின்றார். வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அவர்கள் முதலில் செல்வது மணித் அரோராவிடம் தான்.

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங்குக்கு காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் ஒன்பது மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் டாக்டர் அரோராவிடம் சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொண்டு நான்கு மாதத்தில் காயத்திலிருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றார்.
அதன் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். பல ஒலிம்பிக் வீரர்களின் உடல் தகுதியை மீட்டெடுத்ததற்காகவே இந்தியாவில் ஒலிம்பிக் டாக்டர் என்று ஆரோராவை அழைப்பார்கள். இந்த நிலையில் மைக்கேல் தளத்திற்கு அவர் அளித்த பிரத்தேக பேட்டியில் பல விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார் அதை தற்போது பார்க்கலாம்.
வீரர்களுக்கு நான் அறுவை சிகிச்சை செய்த பின் அவர்கள் விளையாடும் போட்டியை நான் பார்க்கவே மாட்டேன். ஏனென்றால் எனக்கு பயமாக இருக்கும். நாம் அறுவை சிகிச்சை செய்த கால்கள் முட்டி மீண்டும் காயமடைந்து விடுமோ என்ற பயம் மட்டுமே எனக்கு இருக்கும். இதனால் எந்த ஒரு விளையாட்டையும் என்னால் நிம்மதியாக அனுபவிக்க முடியாது.
ஹர்மன்பிரித் ஹாக்கி விளையாடும் போது அவருடைய மருத்துவர் என்பதால் நான் அவரின் கால்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் காயம் அடையும்போது அது மிகப்பெரிய நெருக்கடியை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தும். வீரர்களை காயத்தில் இருந்து மீட்பதை விட அவர்கள் காயத்திற்கு முன்பு எவ்வாறு இருந்தார்களோ அந்த அளவுக்கு அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.
நாங்கள் சிகிச்சை அளிக்கும் 70 முதல் 80 சதவீத வீரர்கள் இந்த நிலையை எட்டுவார்கள். சிலரால் அதை எட்ட முடியாது. சில நேரம் வீரர்கள் நினைத்தபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் மீண்டு வர முடியாது. எனினும் ஒரு மருத்துவராக நாங்கள் எங்கள் பணியை செய்வோம். விளையாட்டை பொருத்தவரை காயம் முழுமையாக குணமடையாமல் ஒரு வீரர் மீண்டும் போட்டியில் பங்கேற்றால் நிச்சயம் அவர்கள் மீண்டும் காயம் அடைய 30 சதவீதம் வாய்ப்பு இருக்கும்.
அதுவே முழுமையாக குணமடைந்த பின் போட்டிகளில் பங்கேற்றால் அவர்கள் மீண்டும் காயமடைவதற்கு மூன்று சதவீதமே வாய்ப்பு இருக்கின்றது. ஹர்மன் பிரித் விஷயத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் ஒன்பது மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் ஹர்மன் பிரித் இந்த ஒலிம்பிக்கை தவறவிட்டால் அடுத்த ஒலிம்பிக் நான் எப்போது விளையாடுவேன் என்று தெரியவில்லை. எனக்கு நீங்கள் அறுவை சிகிச்சை செய்யுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் அறுவை சிகிச்சை செய்தேன். சொன்னபடியே நான்கு மாதத்தில் தன்னுடைய முழு உடல் தகுதியை எட்டி இந்திய அணிக்காக விளையாடினார் என்று மருத்துவர் அரோரா கூறியுள்ளார்.