Exclusive: இந்திய ஒலிம்பிக் சங்க சிஇஓ நியமனத்திற்கு எதிர்ப்பு.. டென்ஷனான பிடி உஷா.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிஇஓ-வாக ரகுராம் ஐயர் கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்க சிஇஓ-வாக அங்கீகரிப்பதற்கான இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா தலைமையில் செயல்பாட்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் ஒருவர் கூட ரகுராம் ஐயருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சிஇஓ நியமன தேர்வை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பிடி உஷா, நிர்வாகிகளின் ஆலோசனையை ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே சிஇஓ நியமன விவகாரம் 2 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்து கொண்டே செல்கிறது. இதனால் ரகுராம் ஐயரை அங்கீகரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

இறுதியாக ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா மைகேல் தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இந்த விவகாரம் குறித்து பிடி உஷா நம்மிடம் பேசுகையில், "2036ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் தொடங்குவதற்கு சிஇஓ நியமனம் மிகவும் முக்கியமானது."
"இந்த விவகாரம் கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல்பாட்டு குழுவில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் சிஇஓ நியமனத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் ரகுராம் ஐயர் வேண்டாம் என்று ரீதியில் தான் அதிகமாக உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற 10 நிர்வாகிகள், ரகுராம் ஐயர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்."
"அதேபோல் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரகுராம் ஐயரின் ஊதியமாக மாதம் ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மறுஆய்வு செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறிய போதும், நிர்வாகிகள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் சிஇஓ நியமனத்தை வேரில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்."
"அவரை சிஇஓ-வாக நியமிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தி அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டேன். அப்போது அவர்கள் அனைவரும் ரகுராம் ஐயர் நியமனத்தை வரவேற்றனர். ஆனால் அங்கீகரிக்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமும் கூறிவிட்டேன். சாதாரணமாக வேடிக்கை பார்த்து நகர்ந்து செல்லும் ஆள் அல்ல நான். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சுத்தமாக்கும் வரை ஓய மாட்டேன்." என்று தெரிவித்தார் பிடி உஷா.


Click it and Unblock the Notifications