தெ. ஆப்பிரிக்காவின் சாதனை வெற்றியை லாவகமாக தட்டிப் பறித்துத் தப்பிய இந்தியா
ஜோஹன்னஸ்பர்க்: இந்தியாவுக்குச் சாதகமான வெற்றி நிலையை தங்களுக்குச் சாதகமாக திருப்பி வெற்றியை நோக்கி நடை போட்டு வந்த தென் ஆப்பிரிக்காவின் கனவைச் சிதைத்து, முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்து விட்டது இந்தியா.
இதன் மூலம் தோல்வியைத் தவிர்த்து கெளரவம் தேடிக் கொண்டு விட்டனர் இந்திய வீரர்கள்.
ஜோஹன்னஸ்பர்க்கில் இதுவரை எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதில்லை. அதேபோல தோல்வியும் அடைந்ததில்லை. டிரா மட்டுமே கண்டுள்ளது. இந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் வெல்லும் சூழல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக நிலை மாறியது. அதையும் இந்தியா கடைசி நேரத்தில் மாற்றிப் போட்டு டிராவில் முடித்து விட்டது.

டிவில்லியர்ஸ், பிளஸ்ஸிஸ் போட்ட சதங்கள்
பாப் டு பிளஸ்ஸிஸ், ஆப் டி வில்லியர்ஸ் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்து வந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. இருவரும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் ஆடி ஆளுக்கொரு சதம் போட்டனர்.

உலக சாதனை இலக்கு
முன்னதாக 458 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடைசி நாளான நேற்று கடைசி வரை போராடியது. ஆனால் 450 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்களை அந்த அணி இழந்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

8 ரன்களில் தப்பிய இந்தியா
வெற்றி இலக்குக்குத் தேவையான ரன்கள் 8 தான். ஆனால் அதற்கு முன்பாகவே போட்டி டிராவில் முடிந்ததால் இந்தியா தப்பியது. தென் ஆப்பிரிக்கா தவித்துப் போய் விட்டது.

சாதனை பார்ட்னர்ஷிப்
பிளஸ்ஸிஸும், டிவில்லியர்ஸும்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்காமல் போனதற்கு முக்கியக் காரணம், இருவரும் 5வது விக்கெட்டுக்கு புதிய உலக சாதனை பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி ரன்களைக் குவித்து விட்டனர். இருவரும் இணைந்து 205 ரன்களைச் சேர்த்தனர். இதில் பிளஸ்ஸிஸ் 134 ரன்களும், வில்லியர்ஸ் 103 ரன்களும் எடுத்தனர்.

ஆஸி.க்கு எதிராகவும் காத்தவர்
டு பிளஸ்ஸிஸின் சிறப்பான ஆட்டம் ஏற்கனவே ஒருமுறை ஆஸ்திரேலியாவிடமிருந்து தென் ஆப்பிரிக்காவைக் காத்துள்ளது. கடந்த வருடம்தான் டுபிளஸ்ஸிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அப்போதும் இதேபோலத்தான் அபாரமாக ஆடி சதம் போட்டு தென் ஆப்பிரிக்காவை தோல்வியின் பிடியிலிருந்து காப்பாற்றினார். நேற்றைய போட்டியில் மொத்தம் 395 நிமிடங்கள் விளையாடி, 309 பந்துகளைச் சந்தித்து, 15 பவுண்டரிகளுடன் 134 ரன்களைக் குவி்த்தார் பிளஸ்ஸிஸ்.

திடீரென எடுபடாமல் போன இந்திய பவுலிங்
முன்னதாக நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. 6 விக்கெட் விழும் வரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க ஆரம்பித்து விட்டனர் பிளஸ்ஸிஸும், டிவில்லியர்ஸும். இதுதான் இந்தியாவுக்கு பாதகமாகிப் போனது.

உலக சாதனையாக இருந்திருக்கும்
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை இழந்து 418 ரன்களை எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றதே உலக சாதனை சேஸிங்காக இருந்து வருகிறது. நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் புதிய உலக சாதனைக்குத்தான் முயன்றது. ஆனால் முடியாமல் போய் விட்டது.

ஆட்ட நாயகன் விராத் கோஹ்லி
முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்களையும் குவித்த இந்தியாவின் விராத் கோஹ்லி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications