டெல்லி: மல்யுத்த வீரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என்றும், இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும் என்றும் கூறியுள்ள பி.டி.உஷாவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது. கபில் தேவ் உள்ளிட்டவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், நமது வீரர், வீராங்கனைகள் நீதிக்காக தெருவில் இறங்கிப் போராடுவது என்னை காயப்படுத்துகிறது. நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கவே கூடாது.
இது ஓர் உணர்வுபூர்வமான பிரச்சினை. இந்த விவகாரம் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்பட வேண்டும். நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வெளிப்படையாக விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக நீரஜ் சோப்ரா குரல் கொடுத்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்களும் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறுகையில், மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும், முன்னாள் விளையாட்டு வீராங்கனையுமான பி.டி.உஷா, வீரர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல், போராட்டம் நடத்தியதை விமர்சித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.