டோணி அசத்தல் சதம் - இலங்கைக்கு 302 ரன்கள் இலக்கு
நாக்பூர்: நாக்ப்பூரில் நடக்கும் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது.
ஆரம்பத்தில் சறுக்கினாலும், டோணி, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டத்தால் தப்பிப் பிழைத்து நல்ல ஸ்கோரை எட்டியது இந்தியா. டோணி சிறப்பாக ஆடி 107 ரன்களை எடுத்தார்.
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரி்க்கெட் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜ்கோட்டில் இரு அணியும் சேர்ந்து மொத்தம் 825 ரன்கள் குவித்தன. அதே போல் நாக்பூரிலும் ரன்வேட்டையை கண்டு ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷேவாக் - சச்சின் ஜோடி களம் இறங்கியது. ஷேவாக் 4 பந்துகளுக்கு 4 ரன்களும், 1 பவுண்டரியும் எடுத்த நிலையில் அவுட்டானார். சனக வெலகதராவின் பந்தை அடித்தபோது குமார சங்ககாராவிடம் கேட்ச் கொடுத்து ஷேவாக் அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கவுதம் காம்பீர், 6 பந்துகளில் 2 ரன் எடுத்து ரன் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேவாக் மற்றும் கம்பீர் இருவரும் துவக்கதிலேயே அவுட்டானதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
அடுத்த 12 ஓவர்களை மெல்ல நகர்த்திக் கொண்டு வந்த சச்சின்-விராட் கோலி ஜோடி 16.5வது ஓவரில் சச்சினின் ஸ்டம்ப் அவுட் மூலம் காலியானது.
52 பந்துகளில் 4 பவுண்டரிகள் மட்டும் அடித்து 43 ரன்கள் எடுத்த சச்சின், அஜந்தா மெண்டிசின் பந்தில் அவுட்டானார்.
அதுவரை சிக்சரே யாரும் அடிக்காத குறையை டோனி வந்துதான் தீர்த்து வைத்தார். ஓரளவு ரன்களும் ஏறத் தொடங்கின. 26.3வது ஓவரில் கோலி எல்பிடபிள்யூ மூலம் அவுட்டானார்.
அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க வேண்டிய நிலையில் சுரேஷ் ரெய்ணா களமிறங்கி தன் பங்குக்கு 3 சிக்சர்களையும் 4 பவுண்டரிகளையும் விளாசினார். 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஸ்கோரை தூக்கி நிறுத்தியது இவர்தான்.
46.2வது ஓவரில் ரெய்னா மாத்தியூசின் பந்தில் சூரஜ்ஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னாவுக்கு இது ஒருநாள் போட்டியில் 13வது அரை சதம். டோனி பொறுப்பாக ஆடி 111 ரன்களில் 107 ரன்களை எடுத்தவர், 49.3வது ஓவரில் சூரஜ் பந்தில் தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அவருக்குப் பிறகு ஹர்பஜன் களமிறங்கினார். கடைசி பந்தில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பலமாக அடிக்க முனைந்தபோது ஸ்டெம்புக்கு வெளியில் சென்று பரிதாபமாக அவுட்டானார் ஹர்பஜன்.
டோனி-ரெய்னா ஜோடி 126 ரன்கள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
ராஜ்கோட்டில் 400 ரன்களை கடந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 301 ரன் எடுத்துள்ளது. இலங்கை அணியில் சூரஜுக்கு 3 விக்கெட்டுகளும், அஜந்தா மெண்டிஸ், மாத்யூஸ், சனக வெலகதரா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications