ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில் இன்றாவது நமக்கு வாய்ப்பு இருக்குமா, இருக்குமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றத்திலேயே உள்ளனர். ஆனால் நம்மை விட சுண்டக்காய் நாடான பிஜி தங்கத்தைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் அடித்துத் துவைத்து அயர்ன் பண்ணி விட்டது பிஜி.
முதல் பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக் கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி .
கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் ஒருமுறை கூட பதக்கம் வென்றது கிடையாது. ஆனால் ரியோவில் முதல் தங்கத்தை வென்று விட்டது பிஜி.
தென் பசிபிக் கடலில் உள்ள குட்டியூண்டு தீவுக் கூட்டம்தான் பிஜி. மொத்தமே 10 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். நம்ம ஊர் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகியவற்றை சேர்த்தால் என்ன சைஸ் இருக்குமோ அதே சைஸ்தான் பிஜி தீவுக் கூட்டமும் இருக்கும்.
கடந்த 1924 ம் ஆண்டு, 15 வீரர்கள் விளையாடும் ரக்பி விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. பின்னர் ஒலிம்பிக்கில் இருந்து அது நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2009 ம் ஆண்டு, 7 பேர் கொண்ட ரக்பி செவன்ஸ் போட்டியை ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்க, ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்தது.
அதில் இருந்தே, ஒலிம்பிக் தங்கத்தை நோக்கி பிஜி ரக்பி அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. விடா முயற்சிக்கும் கடின உழைப்புக்கும், இப்போது அந்த குட்டி நாட்டு அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. உலகில், ரக்பி செவன்ஸ் விளையாட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஒரே நாடு பிஜிதான்.
பிஜி ரக்பி அணிக்கு, அந்த நாட்டு பிரதமர் பெய்னிமாரமா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிஜி தலைநகர் சுவாவில், மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.