சுட்டிப் பெண் ஷாஷினி புவி... ஐந்து வயதில் இரண்டு முறை தேசிய செஸ் சாம்பியன்
பெங்களூர் : செஸ் போட்டிகளில் ஷாஷினி புவி என்ற ஐந்து வயது சிறுமி தேசிய அளவில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார். மூன்றரை வயதில் இருந்து செஸ் ஆடத் துவங்கிய இந்த சிறுமி, ஐந்து வயதிற்குள் இரண்டு முறை தேசிய சாம்பியனாகி ஆச்சரியமளிக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 32வது தேசிய ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் (2018) தொடரில், ஐந்து வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தன் இரண்டாவது தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதற்கு முன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2௦18 ஏழாவது தேசிய பள்ளிகள் அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். அதுவே, அவரது முதல் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம்.

யார் இந்த அசத்தல் சிறுமி ஷாஷினி புவி, எப்படி சிறுவயதில் இருந்து பயிற்சி மேற்கொண்டார் என பார்த்தால் நாம் கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியமாக உள்ளது.
ஷாஷினி புவி பெங்களூரை சேர்ந்தவர். மூன்றரை வயதில் இருந்து செஸ் மீது இருந்த ஆர்வம் காரணமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் செஸ் ஷூட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை தொடங்கி உள்ளார்.

அவர் செஸ் விளையாட ஆரம்பித்தபோது, குறிப்புகள் எடுக்கவோ, குறிப்புகளை படித்து புரிந்து கொள்ளவோ ஏற்ற வயது இல்லை. பல செஸ் நுணுக்கங்களை கூட புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடிய பின் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் அவரது பெற்றோர்.
தற்போது வாரநாட்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரமும், விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்து வருகிறார். அவரது வயதுக்கு புரிந்து கொள்ள கடுமையான பல நுணுக்கங்களை கூட கற்று தேர்ந்து வருகிறார் இந்த சுட்டிப் பெண்.

செஸ் ஆடுவதில் பொறுமை மிக அவசியம். எதிராளியின் மனநிலையை கணிப்பதற்கும், ஆட்டத்தின் போக்கை புரிந்து கொள்ளவும் அதிக பொறுமை தேவை. அந்த விஷயத்தில் ஷாஷினி புவி படு கெட்டி என தெரிகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு போட்டியில், இரண்டு மணி நேரமும், மற்றொரு போட்டியில் ஒன்றரை மணி நேரமும் விளையாடி தான் பொறுமைசாலி என நிரூபித்துள்ளார்.
இன்னும் சில வருடங்களில் மற்றொரு இந்திய கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் தயார்.


Click it and Unblock the Notifications