பிளாஷ்பேக் : 2018 காமன்வெல்த்தில் அசத்திய இந்திய வீரர்கள்.. வரிசை கட்டிய பதக்கங்கள், சாதனைகள்
Recommended Video

நியூடெல்லி : 2018 காமன்வெல்த் தொடர் ஏப்ரல் 4 முதல் 15 வரை ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்றது. இந்தியா இந்த காமன்வெல்த் தொடரில் பங்கேற்றது. இது இந்தியா பங்கேற்கும் 18வது காமன்வெல்த் தொடர் ஆகும்.
2௦10 காமன்வெல்த் தொடருக்கு பின் இந்தியாவின் சிறந்த காமன்வெல்த்தாக இந்த தொடர் அமைந்தது. 26 தங்கப் பதக்கங்களுடன், மொத்தமாக 66 பதக்கங்கள் வென்று மூன்றாம் இடம் பிடித்தது இந்தியா. 2010இல் 38 தங்கப் பதக்கங்களுடன், மொத்தமாக 101 பதக்கங்கள் வென்று இருந்தது இந்தியா.
காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது சிறந்த பதக்க எண்ணிக்கை 2018இல் கிடைத்தது. 2002இல் 69 பதக்கங்கள் வென்றது இந்தியாவின் இரண்டாவது சிறந்த செயல்பாடாகும்.

எந்த விளையாட்டில் அதிக பதக்கங்கள்?
இந்த தொடரில் இந்தியாவுக்கு 16 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது. இதில் 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் ஆகியவை அடங்கும். அடுத்து மல்யுத்தம். இதில் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்தன. மூன்றாவதாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை அதிகரித்தது பளுதூக்குதல். இதில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்தன.

டேபிள் டென்னிஸ் கலக்கல்
இந்த காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் வீரர்கள் கலக்கினர். இது வரை காமன்வெல்த் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டேபிள் டென்னிஸ் குழு, 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று இருந்தது. இதில் மகளிர் பிரிவில் மணிகா பத்ரா தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கம் வென்று ஆச்சரியம் அளித்தார். அவர் ஒற்றையர் பிரிவில் தங்கம், மகளிர் அணிப் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் தங்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இதில் மகளிர் ஒற்றையர் மற்றும் அணிப் பிரிவில் இந்தியா முதன் முறையாக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களின் சாதனைகள்
நீரஜ் சோப்ரா ஆடவர் ஈட்டி எறிதலிலும், மீராபாய் சானு மகளிர் 48 கிலோ பிரிவு பளுதூக்குதலிலும் முதன் முறையாக தங்கம் வென்றனர். தீபக் லாதர் பளுதூக்குதலில் மிக இளைய வயதில் பதக்கம் வென்ற இந்தியர் ஆனார். அனீஸ் பான்வாலா துப்பாக்கி சுடுதலில் இளைய வயதில் தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை செய்தார்.

இந்திய பாட்மிண்டன் அசத்தல்
இந்திய பாட்மிண்டன் குழு 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று சிறந்த காமன்வெல்த் செயல்பாட்டை பதிவு செய்தது. சாய்னா நேவால் தன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை செய்தார். அதிலும் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை அவர் எதிர் கொண்டார். கலப்பு பாட்மிண்டன் அணியும் முதன் முறையாக தங்கம் வென்றது.


Click it and Unblock the Notifications