அபுதாபி: ஃபார்முலா ஓன் 2025 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் லாண்டோ நாரீஸ் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வெர்ஸ்டப்பன் வெறும் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஃபார்முலா ஓன் 2025 ஆம் ஆண்டு சீசனில் கடைசி தொடர் அபுதாபியில் நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய பந்தயமாக இது இருந்தது. வெர்ஸ்டப்பன், ஆஸ்கார் பியாஸ்ட்ரி மற்றும் லாண்டோ நாரீஸ் ஆகிய மூன்று வீரர்களும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு இருந்தது.

இதில் பிரிட்டன் வீரர் லாண்டோ நாரீஸ் பொருத்தவரையில் டாப் மூன்று இடத்தை பிடித்தாலே உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்ய முடியும். நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனை பொறுத்தவரை அவர் பந்தயத்தை முதலிடத்தில் முடிக்க வேண்டும், அதே சமயம் நாரீஸ் நான்காவது இடத்தை பிடித்திருக்க வேண்டும். இல்லையெனில் லாண்டோ நாரீஸ் விட 13 புள்ளிகள் கூடுதலாக மேக்ஸ் வெர்ஸ்டப்பன் பெற்று இருக்க வேண்டும்.
அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கார் பியாஸ்டரி, உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால், அபுதாபி கிராண்ட் பிரீ பந்தயத்தில் முதலிடத்தில் பிடித்திருக்க வேண்டும். சக மெக்லெர்ன் அணி வீரரான லாண்டோ நாரீஸ் ஆறாவது அல்லது அதற்கு கீழ் இடத்தைப் பிடித்திருக்க வேண்டும். இப்படி மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு இருந்ததால், ஃபார்முலா ஒன் ரசிகர்கள் இந்த பந்தயத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அபுதாபி கிராண்ட் பிரீ 58 லேப்கள் கொண்டது. இந்த அபுதாபி ரேஸ் சர்க்யூட்டில் ஒரு லேப் 5.281 கிலோமீட்டர் தூரம் ஆகும். இந்த நிலையில் பந்தய தூரமான 306.29 கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக யார் கடந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் ரெட் புல் நிறுவனத்தைச் சேர்ந்த 4 முறை உலக சாம்பியன் ஆன நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 26 நிமிடம் ஏழு வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.
எனினும் பிரிட்டன் வீரர் லாண்டோ நாரீஸ், இந்த பந்தயத்தை மூன்றாவது இடத்தை நிறைவு செய்தார். 15 புள்ளிகள் பெற்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் 2025 புள்ளி பட்டியலில் நாரீஸ் 423 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார். நான்கு முறை சாம்பியன் ஆன வெர்ஸ்டப்பன் 421 புள்ளிகள் பெற்று வெறும் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ஐந்தாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
வெற்றி பெற்றவுடன் காரிலே அமர்ந்து அழுத மெக் லெர்ன் நிறுவனத்தின் லாண்டோ நாரீஸ், தனது தாய்க்கும் தந்தைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் என்னால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது என்று கண்ணீர் மல்க அழுதார்.