பீலேவை அவமானப்படுத்துகிறதா பிரேசில்... மாடல் அழகி கோப்பையை வழங்கும் மர்மம் என்ன?
ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பிரேசில் மாடல் அழகி ஜிசலி பண்ட்சென், கோப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரிசளிப்பு விழாவில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாடல் அழகியை அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரேசிலில் 20வது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்து 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாரில் இத்தொடர் நடக்கவுள்ளது. இதில் கத்தாருக்கு உலக கோப்பை தொடரை நடத்த அனுமதி வழங்கப்பட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், தனியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த பிரச்னையில் 'பிபா' தலைவர் செப் பிளாட்டருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இவர், 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் வென்ற ஸ்பெயின் அணிக்கு கோப்பை வழங்கினார்.

பிரேசில் அதிபருக்கும் எதிர்ப்பு
இம்முறை செப் பிளாட்டருக்கு எதிர்ப்பு இருப்பதால், இவரை வைத்து கோப்பை தருவதை தவிர்க்க முடிவு செய்துள்ளனர். இவருக்குப் பதில் பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப்பை வைத்து கோப்பை வழங்க திட்டமிட்டனர்.

ரூ.66000 கோடி வீண்
ஆனால், உலக கோப்பை தொடருக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 66 ஆயிரம் கோடியை வீணடித்து விட்டதாக மக்கள் குமுறுகின்றனர்.இந்த பணத்தை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தி இருக்கலாமே என, அதிபர் தில்மா மீது எதிர்ப்பு உள்ளது. இது தொடர்பான போராட்டங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

சுவாரஸ்யமில்லாத தொடக்கவிழா
உலக கோப்பை தொடரின் துவக்க விழா, ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. இதனால், நிறைவு விழாவை சிறப்பான முறையில் முடிக்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

மாடல் அழகி ஜிசலி பண்ட்சென்
இதன் ஒரு பகுதியாக பரிசளிப்பு விழாவில் பங்கேற்று, சாதிக்கும் அணிக்கு கோப்பை வழங்க, செப் பிளாட்டர், அதிபர் தில்மாவுக்குப் பதில், பிரேசிலில் ‘சூப்பர்' மாடல் அழகி ஜிசலி பண்ட்சென் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரங்கட்டப்படும் பீலே
இது, மூன்று முறை (1958, 62, 70) உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்த பீலேவுக்கு பெரும் அவமானம் என்கின்றனர் அவரது ரசிகர்கள். பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் விளம்பர துாதராக பீலே நியமிக்கப்பட்டார். இவரை துவக்கவிழாவுக்கே அழைக்காமல் புறக்கணித்தனர்.

எங்கே போனார் பீலே
பீலேவை கவுரவப்படுத்தும் விதமாக பிரேசிலில் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டாலும் உலக கோப்பை தொடரில் தான் இவரை பார்க்க முடியவில்லை. போட்டி இடைவேளையில் வரும் 'டிவி' விளம்பரத்ததில் மட்டுமே தோன்றுகிறார்.

என்னமோ நடக்குது
பீலேவுக்கும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கும் இடையே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, என்று பீலேவுடன் சான்டோஸ் கிளப் அணியில் விளையாடிய கய்ல்ஹெர்மா கூறியுள்ளார்.

பிரேசிலின் அடையாளம் பீலே
பிரேசில் கால்பந்து அணியின் அடையாளமாக பீலே திகழ்கிறார். வெளிநாட்டவரைப்போல இங்குள்ள ரசிகர்கள் இவரை பெரிய வீரராக பார்க்க மறுக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

புறக்கணிப்புக்குக் காரணம் என்ன?
பிரேசிலில் கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேஷன் கோப்பையின்போது, அடிப்படை வசதிகள் சிறப்பாக இல்லை என பீலே கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் கூட தற்போதைய புறக்கணிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications