பிஞ்சு போன ஷூவுடன் ஓடித்தான் தங்கம் வென்றேன்... கண்ணீரை வரவழைத்த தங்க மகள் கோமதி
சென்னை:பிய்ந்து போன ஷூவுடன் ஓடித்தான் ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்றதாக தங்க மங்கை கோமதி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அதில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியை சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்து சாதித்தவர்.

குவியும் பாராட்டுகள்
ஏழ்மையான நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கத்தாரிலேயே கோமதிக்கு உலக தமிழர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

தாயகம் திரும்பினார்
தங்க மங்கை கோமதி, தாயகம் திரும்பினார். ஆனால் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.

வரவேற்கவில்லை
விளையாட்டுத்துறை ஆணையம் தரப்பிலும் எந்த அதிகாரிகளும் விமான நிலையத்துக்கு வரவில்லை. இது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் பாராட்டு
நாடு திரும்பிய கோமதிக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டு, 3 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஆலப்பாக்கம் உள்ள அந்த பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

கஷ்டப்பட்டேன்
அதில் கலந்த கொண்ட பிறகு கோமதி செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிறந்தது முதலே வறுமை தான். தந்தை என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

கனவு நனவானது
அவரது கனவு தற்போது நனவாகி இருக்கிறது. அவர் தற்போது இல்லை. எனக்காக என் தந்தை மாட்டும் தீவனத்தை சாப்பிட்டுள்ளார். அதாவது வீட்டில் கொஞ்சம் தான் சோறு இருக்கும். அதை எனக்கு கொடுத்துவிட்டு தந்தை பசியில் மாட்டுத் தீவனத்தை சாப்பிடுவார்.

பிய்ந்து போன ஷூ
எனக்காக இவ்வளவு தியாகம் செய்த தந்தை தற்போது இல்லை. மிகுந்த சிரமப்பட்டுதான் இந்த சாதனையை படைத்தேன். கத்தாரில் ஓடுவதற்கு என்னிடம் நல்ல ஷூ கூட இல்லை. பிய்ந்து போன ஷூவை போட்டு கொண்டு தான் களத்தில் ஓடினேன். தற்போது தங்கம் கிடைத்துள்ளது என்று கோமதி கூறினார்.


Click it and Unblock the Notifications