ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் ரியோ நகரில் இன்று தொடங்க உள்ள 31வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 207 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், கொசோவா, தெற்கு சூடான் போன்ற நாடுகள் முதல்முறையாக தங்களது நாட்டு விளையாட்டு வீரர்களை அனுப்பிவைத்துள்ளன.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டை முன்னிட்டு, '2016 டூடுல் பழ விளையாட்டு போட்டி' ஒன்றை கூகுள் டூடுல் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், வரும் நாட்களில் பழக்கூடையில் உள்ள அன்னாச்சிப்பழம், ஸ்ட்ராபெரி, தர்பூசணி ஆகிய பழங்கள் ரியோ போட்டியில் பங்கேற்று, தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டிராபெரி ஓட... அதை தர்ப்பூசணி துரத்த... ஒரே ஜாலியான விளையாட்டாக உள்ளது. ஒவ்வொரு பழங்களும், தங்களின் திறமை, வலிமை, தெம்பு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தி 'ஃபிரெஷ்ஃபுரூட்' எனும் பட்டத்தை வெல்லும்படி சுவாரஸ்யாமான டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும், ஓட்டப்பந்தய டிராக், நீச்சல், சைக்கிளிங் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பழ விளையாட்டில் பங்கேற்க ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்கள் வைத்திருப்பவர்கள், கூகுள் டூடுலை கிளிக் செய்து விளையாடலாம்.