குகேஷ் என்னப்பா இது.. 42 சதவீத பரிசுப் பணம் அவுட்.. தோனி சம்பளத்தை விட அதிக வரி செலுத்த வேண்டும்
சென்னை: 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் குகேஷ் பரிசுப் பணத்தில் சுமார் 42 சதவீதத்தை அனுபவிக்க முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2024 உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சீன வீரரும், முன்னாள் சாம்பியனுமன டிங் லிரனை, குகேஷ் வீழ்த்தி இருந்தார். அதன் மூலம், அவருக்கு பரிசுப் பணமாக சுமார் 11.34 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், அதை அவர் முழுமையாக அனுபவிக்க முடியாது என தற்போது கூறப்படுகிறது.

அவர் தனது பரிசுப் பணத்தில் 4.67 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். தோனியின் அடுத்த ஆண்டு ஐபிஎல் சம்பளத்தை விட அதிக தொகையை அவர் வரியாக செலுத்த உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ஒருவருடைய ஆண்டு வருமானம் 5 கோடிக்கும் அதிகமாக சென்றால் சர்சார்ஜ், சுகாதாரம் மற்றும் கல்விக்கான தொகை என அனைத்தையும் சேர்த்து சுமார் 42 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
அதன்படி குகேஷ் வென்று இருக்கும் 11.34 கோடி ரூபாயில் சுமார் 4.67 கோடி ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது 2025 ஐபிஎல் தொடரில் தோனியின் சம்பளத்தை விட அதிகம் ஆகும். தோனி 2025 ஐபிஎல் தொடரில் 4 கோடி மட்டுமே சம்பளமாக பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குகேஷுக்கு இது பெரிய இழப்பாக பார்க்கப்பட்டாலும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழங்க உள்ள பரிசுத் தொகைக்கு அவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு குகேஷ்-க்கு 5 கோடி பரிசை அறிவித்து உள்ளது. அதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications