Black Lives Matter.. சபாஷ் ஹேமில்டன்.. ஒடுக்கப்பட்டோருக்காக சரியான நேரத்தில் கிடைத்த குரல்
லண்டன்: கருப்பர் இனத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் அமெரிக்காவில் போலீஸ்காரரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்தான் இன்று டாக் ஆப் தி வேர்ல்ட். உலகம் முழுவதும் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு குரல்கள் வலுத்து வருகின்றன. அதில் ஓங்கி ஒலித்த ஒரு குரல்தான் லூயிஸ் ஹாமில்டன் வாய்ஸ்.
பார்முலா ஒன் சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் இனவெறிக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கூட அவர் தீவிரமாக செயல்பட்டு வருவது பலருடைய பாராட்டுக்களை குவித்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த அடிமை வியாபாரியின் சிலையை போராட்டம் நடத்தியோர் சின்னாபின்னமாக்கி உடைத்த செயலை ஹாமில்டன் வரவேற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆவேசம்
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் போட்டுள்ள பதிவில், மக்களை விற்று அதில் பணம் சம்பாதித்து உண்டு கொழுத்த யாருடைய சிலையாக இருந்தாலும் சரி அதை தூள் தூளாக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மனித குலத்துக்கு அவமானம். அடுத்து எந்த சிலையை நாம் தகர்க்கப் போகிறோம் என்று ஆவேசமாக கேட்டுள்ளார் ஹாமில்டன்.

அகற்றுங்கள்
அத்தோடு நிற்கவில்லை ஹாமில்டன். உலக நாடுகளின் அரசுகளுக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை அரசுகள் மதிக்க வேண்டும். மக்களை நேசிக்காதவர்களின் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். அமைதியான முறையில் நீங்களே இவற்றை எடுத்து விடுங்கள். இனவெறியின் அடையாளமாக எதுவுமே இருக்கக் கூடாது என்று ஹாமில்டன் துணிகரமாக கோரிக்கை வைத்துள்ளார்.

கொடூரமான மரணம்
ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட விதம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. நான் பார்த்துக் கொண்டிருப்பது நிஜமா என்று எனது கண்களாலேயே நம்ப முடியவில்லை. மிகக் கொடூரமான செயல் அது. நாம் யார் என்பது முக்கியமல்ல.. நமது நிறம் என்ன என்பது முக்கியமல்ல.. நாம் மனிதர்களா என்பதுதான் முக்கியம். தோளின் நிறத்தை வைத்து ஒருவரை எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும் என்று ஆவேசமாக கேட்டுள்ளார் ஹாமில்டன்.

விளையாட்டுத் துறையினர்
ஹாமில்டனின் இந்த தொடர் பிரசாரம் உலக அளவில் விளையாட்டுத்துறையினரைக் கவர்ந்துள்ளது. பலரும் ஹாமில்டனுக்கு ஆதரவாக அணி திரண்டுள்ளனர். ஹாமில்டன் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபல விளையாட்டுத்துறையினரும் கூட ஜார்ஜ் மரணத்திற்கு நீதி கேட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர் பிரசாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது நினைவு கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications