சம்பாதிப்பதில் ஒரு பங்கை கொடுங்க.... விளையாட்டு வீரர்களை கொந்தளிக்க வைத்த ஹரியானா அரசு உத்தரவு!
சண்டிகர்: விளையாட்டு போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை தர வேண்டும் என்று விளையாட்டு வீரர்களுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. விளையாட்டை மேம்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு விளையாட்டு வீரர்களோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகையை அரசு குறைத்தது.
அதனால் கடந்த மாதம் நடப்பதாக இருந்த வீரர்களை கவரவிக்கும் அரசு நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக வீரர்கள் கூறியிருந்தனர். அதனால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஹரியானா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஹரியானா விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம் கிடையாது
இந்தத் தொகை மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர ஹரியானா அரசுப் பணியில் உள்ளவர்கள், முன்அனுமதி பெற்று, தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்றால், முழு சம்பளமும் விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இந்த உத்தரவுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பணியில் உள்ள முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங், குத்துச்சண்டை வீரர் அகில் குமார் ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இது புதுசா இருக்கு
அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் விளாசியுள்ளார். இதுபோன்ற ஒரு உத்தரவை உலகில் இதுவரை எந்த அரசும் பிறப்பித்ததாக தெரியவில்லை. வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடவுளே காப்பாற்று
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், கடவுளே இதுபோன்ற அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்று என்று டுவிட் செய்துள்ளார். இதுபோலவே பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் சர்ச்சை மற்றும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்த சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப் பெறுவதாக பாஜகவைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications