ஈரானை தங்கம் வெல்ல வைத்த இந்தியப் பயிற்சியாளர்... கபடியில் இந்தியா தோற்ற காரணம் இதுதான்!
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டில் இந்தியா கபடியில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் இரண்டுமே இதுவரை ஆசிய விளையாட்டில் சிறப்பாக பங்களித்து தங்கங்களை குவித்த வரலாறு இருப்பதால், இந்த முறையும் அது தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆசிய விளையாட்டில் ஆடவர் அணி இதுவரை தங்கம் வெல்லாமல் இருந்ததே இல்லை என்ற நிலை நிலவியது. அதே போல, பெண்கள் அணி கடந்த இரண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று மூன்றாவது வாய்ப்புக்கு காத்திருந்தது.

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆடவர் கபடி அணி ஈரானிடம் அரையிறுதியில் தோற்று வெண்கலம் மட்டுமே வென்றது. இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த மறுநாளே, மகளிர் கபடியில் ஈரான் அணியிடம் இந்திய அணி இறுதியில் தோற்று வெள்ளி மட்டும் வென்றது.
மகளிர் கபடியில் ஈரானின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒரு இந்தியப் பெண் தான் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஷைலஜா ஜெயின் என்ற கபடி பயிற்சியாளர் தான் ஈரான் மகளிர் அணிக்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி அளித்து வருகிறார்.
ஷைலஜா ஜெயின் மகாராஷ்டிராவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறுவர் சிறுமியர்களுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். இவரது அனுபவம் இந்திய கபடி அமைப்பால் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில், ஈரான் இவரை தங்கள் மகளிர் அணிக்கு பயிற்சி அளிக்க கடந்த வருடம் அழைத்துள்ளது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியோடு அவரது பயிற்சி ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அவர் ஈரான் மகளிர் அணியிடம் இறுதிப் போட்டிக்கு முன்பாக, "தங்கம் வெல்லாமல் என்னை இந்தியாவிற்கு அனுப்பி விடாதீர்கள்" என கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். போட்டியில் தங்கம் வென்ற பின் அந்த ஈரானிய வீராங்கனைகள் "நீங்கள் கேட்டதை நாங்கள் பரிசாக கொடுத்துள்ளோம்" என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
ஈரான் இந்தியாவை ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளில் தோற்கடித்து இருந்தாலும், இந்தியர்கள் மீதான மதிப்பு அவர்களிடையே உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications