சிந்தாமல் சிதறாமல் வென்ற சிந்து
ஹாங்காங்: சூப்பர் சீரியஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் முன்னேறினர். காயம் காரணமாக, கிடாம்பி ஸ்ரீகாந்த் பங்கேற்கவில்லை.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசி ஓபன் போட்டியான ஹாங்காங் ஓபன் போட்டி நடந்து வருகிறது. அடுத்ததாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் துபாயில் நடக்க உள்ளது.

இந்த ஆண்டில் சூப்பர் சீரியஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 11 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது. கடைசியாக நடந்த சீன ஓபனில் எந்தப் பட்டமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஹாங்காங் ஓபனில் இந்தியாவுக்கு மற்றொரு பட்டம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
ஹாங்காங் ஓபன் முதல் சுற்று ஆட்டங்களில் பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், எச்எஸ் பிரனாய் வென்றனர். தேசிய சாம்பியனான பிரனாய், 36 வயதாகும் ஹாங்காங் வீரர் ஹூ யுன்னை சந்தித்தார். 19-21, 21-17, 21-15 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீரர் கசுமாசா சகாயை அவர் சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னாவும், சிந்துவும் சுலபமாக வென்றனர். உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சிந்து, 21-18,. 21-10 என்ற கணக்கில் ஹாங்காங்கின் லியாங் யூயெட் யீயை வென்றார். சாய்னா 21-19, 23-21 என்ற செட்களில் டென்மார்க்கின் மீட்டே போல்செனை வென்றார்.


Click it and Unblock the Notifications