ரியோ: எனக்கு கிடைத்த இந்த பதக்கத்தை என்னுடைய பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என்று ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த பிவி சிந்து கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 10ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்துவும், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினும் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டை எளிமையாக கைப்பற்றிய சிந்துவுக்கு இரண்டாது செட் கடும் சவாலாக இருந்தது. இதேபோல் தான் மூன்றாவது செட்டும், கரோலினா வேகத்தை சிந்துவால் சமாளிக்க முடியவில்லை.
நான் மிதக்கிறேன்
தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த சிந்து இறுதியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது குறித்து சிந்து கூறுகையில், இப்போது நான் மேகத்தில் மிதப்பது போல் உணர்கிறேன் என்று கூறினார்.
அனைவருக்கும் நன்றி
இந்த வாரம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும், எனக்கு ஆதரவாகவும், பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெற்றோருக்கு சமர்பணம்
என்னோடு போட்டி போட்ட கரோலினாவும் நன்றாக விளையாடினார். எனக்கு கிடைத்த இந்தப் பதக்கத்தை என்னுடைய பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சிந்து வெற்றியை பெற்றோருடன் இந்தியாவே மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது. இந்தியா முழுவதும் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றதை முன்னிட்டு சிந்து பிறந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.