எனக்கு செஸ் விளையாட தெரியாது.. எப்படி புரிந்துகொள்வேன் தெரியுமா? பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி!
சென்னை: "பிரக்ஞானந்தாவிற்கும், அவரது தாய்க்கும் எனது வாழ்த்துகள். என்னுடைய ஒவ்வொரு போட்டியிலும் என் தாய் கூடவே இருந்து எனக்கு பெரும் பலமாக இருந்துள்ளார். அம்மாக்கள் நம்முடன் இருப்பதே நமக்கு தனி பலம்" - ரஷ்யாவின் பிரபல செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ் பதிவிட்டுள்ள ட்வீட் தான் இது.
செஸ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் ஃபேபியோ கருவானாவை வீழ்த்திய பின், பிரக்ஞானந்தா பேட்டி கொடுத்ததை நெகிழ்ச்சியுடன் பார்த்த அவரது தாய் நாகலட்சுமியின் புகைப்படங்கள் காண்போர் அனைவரையும் நெகிழச் செய்தது. செஸ் உலகக்கோப்பை மட்டுமல்ல, பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டை விளையாட தொடங்கியது முதலே அவரின் தாய் நாகலட்சுமி எப்போதும் உடனிருந்து வருகிறார்.

4 வயதில் பிரக்ஞானந்தா செஸ் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியது முதல், தாய் நாகலட்சுமி உடன் பயணிப்பார். சிறிய போட்டியென்றாலும், நாகலட்சுமியின் பிரார்த்தனைகள் எப்போதும் ஓய்ந்ததே இல்லை. எத்தனை போட்டிகள் என்றாலும், எவ்வளவு மணி நேரம் நடந்தாலும், பிரக்ஞானந்தாவின் தாய் அவரை பாதுகாப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.
இவ்வளவு ஆண்டுகள் பிரக்ஞானந்தாவுக்கு அனைத்துமாக இருந்தும், நாகலட்சுமிக்கு செஸ் விளையாட்டு பற்றி எதுவும் தெரியாது. இதுகுறித்து நாகலட்சுமி பேசுகையில், பிரக்ஞானந்தாவுக்கு காலை 10 மணி முதல் 7 மணி வரை பயிற்சி இருக்கும். அதன்பின் 3 முதல் 4 மணி நேரத்திற்கான வீட்டுப்பாடங்கள் அளிக்கப்படும். அதன்பின் வீட்டு வேலைகளை முடிக்கவே நள்ளிரவாகிவிடும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், செஸ் விளையாட்டு கற்றுக் கொள்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. அதேபோல் ஒருமுறை செஸ் போட்டியின் போது பிரக்ஞானந்தாவின் கண்களை மட்டுமே எப்போதும் பார்க்கவே மாட்டேன். நான் என்ன உணர்கிறேன் என்பதை பிரக்ஞானந்தாவிற்கு தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் கண்களை பார்த்து என்ன உணர்கிறார் என்பதை என்னால் சொல்ல முடியும். அதுதான் அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளாததற்கு காரணமாக உள்ளது. என்னுடைய மகன், மகள் இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்துக் கொடுப்பதே என் பணி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications