தமிழக வீரர் இளம்பரிதி இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.. 16 வயதில் வரலாறு
சென்னை: 'இந்தியாவின் செஸ் தலைநகரம்' என்று அழைக்கப்படும் தமிழகத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டும் வகையில், சென்னையைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவர் இளம்பரிதி, இந்தியாவின் 90-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், தமிழகத்திலிருந்து உருவான 35-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

சாதனை
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம்பரிதி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான மூன்றாவது மற்றும் இறுதி 'நார்ம்' (Norm) ஐப் பூர்த்தி செய்தார். மேலும், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு அத்தியாவசியமான 2500 எலோ புள்ளிகளையும் (Elo Rating) கடந்து இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அனிஷ் கிரி உதவி
சென்னையில் 2009-ஆம் ஆண்டு பிறந்த இளம்பரிதி, ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், தனது கவனத்தை முழுமையாக அதில் செலுத்தினார். பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தரிடம் முறைப்படி பயிற்சி பெற்று, தனது நுட்பங்களையும், வியூகங்களையும் நாளுக்கு நாள் மெருகேற்றினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் இவரது அசாத்தியமான திறமை சர்வதேச செஸ் அரங்கின் கவனத்தை ஈர்த்தது. அப்போது உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரி, தனது பரிசுத்தொகையை இளம்பரிதியின் பயிற்சிக்கு வழங்கி ஊக்கப்படுத்தியது, அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் 16 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
குவியும் பாராட்டுக்கள்
இளம்பரிதியின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியில், "இந்தியா மற்றும் தமிழகத்தின் செஸ் போட்டிகளில் இது மற்றொரு மைல்கல் மற்றும் பெருமைமிக்க தருணம். இந்தியாவின் 90-வது மற்றும் தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் ஆன இளம்பரிதிக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால செஸ் பயணம் தொடர்ந்து வெற்றி பெறவும், இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற சாதனையாளர்களின் வரிசையில், தமிழகத்திலிருந்து மற்றுமொரு இளம் செஸ் புயல் உருவாகியுள்ளது. இளம்பரிதியின் இந்த சாதனை, வருங்கால செஸ் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications