கிரிக்கெட் உட்பட இந்திய விளையாட்டு வீரர்கள் பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல்!
இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, முதல்முறையாகப் பாகிஸ்தானுக்குத் விளையாட்டு வீரர்களை அனுப்ப இந்தியா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2027-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய ஒலிம்பிக் சங்கத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, 2027 ஏப்ரல் 4 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்குமாறு அந்நாடு விடுத்த அழைப்பை இந்தியா கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள் வரும் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.

கடைசியாக 2004-ல் இஸ்லாமாபாத்தில் இந்த விளையாட்டுப் போட்டிகளை பாகிஸ்தான் நடத்தியது. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை பாகிஸ்தான் நடத்த உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 28 விளையாட்டுப் போட்டிகள் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன.
இஸ்லாமாபாத்தில் ஸ்குவாஷ், டென்னிஸ் உள்ளிட்ட 15 போட்டிகளும், லாகூரில் கிரிக்கெட், ஹாக்கி மற்றும் நீச்சல் உள்ளிட்ட 10 போட்டிகளும் நடத்தப்படும். கடந்த 2008-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். வெளிநாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த விளையாட்டுத் தடை இந்த முடிவின் மூலம் தளரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

