இலங்கையை வீழ்த்திய இந்தியா- டுவென்டி20 வரலாற்றி்ல் புதிய சாதனை
மொஹாலி: இலங்கை அணியுடனான இரண்டாவது டுவென்டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டுவென்டி20 வரலாற்றில் அதிக ரண்கள் கொண்ட இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து புதிய சாதனையையும் இந்திய அணி படைத்தது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கையை இந்திய அணி வென்று சர்வதேச தர வரிசையில் முதலிடத்தையும் பெற்றது.
இதையடுத்து டுவென்டி20 தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் இலங்கை 29 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகித்தது. 2வது போட்டி மொஹாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இலங்கை அணியில் புஷ்பகுமாரா நீக்கப்பட்டு வீரரத்னே இடம் பெற்றார். இந்திய அணியில் அறிமுக ஆட்டக்காரர் சுதீப் தியாகி மற்றும் தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா களமிறங்கினர்.
இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தில்ஷான், ஜெயசூரியா களமிறங்கினர். தில்ஷான் 1 ரன் மட்டுமே எடுத்து இஷாந்த்திடம் ஆட்டமிழந்தார்.
ஜெயசூர்யா 31 ரன்களும் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), சங்கக்கரா 59 ரன்களும் (31 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். இவர்கள் ஜோடியாக 81 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது இதற்கு காரணம்.
ஜெயசிங்கே 38, மகிளா 12, கபுகேதரா 2, வீரரத்னே 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. மேத்யூஸ் 26, குலசேகரா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் யுவராஜ் 3, இஷாந்த் 2, பதான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கயது. சேவக், கம்பீர் ஜோடி 6 ஓவரில் 58 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கம்பீர் 21 எடுத்து ரன் அவுட் ஆனார். அதிரடியாக அரை சதம் விளாசிய சேவக் 64 ரன் எடுத்து (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேச் கொடுத்தார்.
அடுத்து கேப்டன் டோனியுடன் சேர்ந்து யுவராஜ் சிக்சர்களை பறக்கவிட்டு 20 பந்தில் அரைசதம் கடந்தார். டோனி 46 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 9 ரன்னில் வெளியேறினர்.
யுவராஜ் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து வென்றது. யுவராஜ் 60 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), கார்த்திக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டி20 போட்டி வரலாற்றிலேயே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை வெற்றியுடன் இந்தியா டி20 தொடரை 1:1 என சமன் செய்தது. யுவராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் சங்கக்காரா.


Click it and Unblock the Notifications