யு 17 கால்பந்து.. இந்தியாவுக்கு ஒரு செம வாய்ப்பு!
டெல்லி: உலககக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கொலம்பியாவை இந்தியா சந்திக்கிறது. முதல் ஆட்டங்களில் இரு அணிகளுமே தோல்வியடைந்துள்ளதால், இதில் வெற்றி பெற முழு முயற்சியை மேற்கொள்ளும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்தியாவில் நடந்து வருகின்றன. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதுடன், அதை முதல் முறையாக நடத்தும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

ஏ பிரிவில் மிகவும் வலுவான அணிகளுடன் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் 3-0 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. அதே நேரத்தில் கொலம்பியாவை 1-0 என கானா வென்றது.
மூன்று நாட்கள் மட்டுமே போட்டி நடந்துள்ள நிலையில் இதுவரை 16 ஆட்டங்களில், 43 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒருபோட்டிக்கு 3.6 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் அணி 7-1 என்று நியூ காலடோனியா அணியையும், ஜப்பான் 6-1 என்று ஹோண்டுராஸ் அணியையும் வென்றதுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு எதிராக, மிகவும் வலுவான அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் மட்டுமே வெல்ல முடிந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் தடுப்பாட்டம் பாராட்டும்படி இருந்தது.
அந்தப் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிப் பாதையில் செல்வதற்கு இன்று இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், கொலம்பியாவும் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் விளையாடும்.
பல்வேறு வயது பிரிவுகளையும் சேர்த்து, ஆண்கள், பெண்கள் உலகக் கோப்பை போட்டிகள் இதுவரை 77 முறை நடந்துள்ளன. முதல்முறையாக அதை நடத்துவதுடன், பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதால், கால்பந்தில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதை கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Story first published: Monday, October 9, 2017, 18:25 [IST]
Other articles published on Oct 9, 2017


Click it and Unblock the Notifications