இந்தியா 544க்கு டிக்ளேர்-வங்கதேசம் பதிலடி பேட்டிங்
மிர்பூர்: 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் நிதானமாக பேட்டிங் செய்து ரன்களைக் குவித்தது.
மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை வங்கதேசம் 233 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அபாரமாக ஆடி 8 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
சச்சினும், டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். சச்சின் 143 ரன்களும், டிராவிட் 111 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் டோணி சிறப்பாக ஆடி 89 ரன்களைக் குவித்தார்.
வங்கதேச தரப்பில், ஷபியுல் இஸ்லாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஷாகிப் அல் ஹசனுக்கு 2 விக்கெட்களும், ஷஹாதத் உசேன், முகம்மது அஷ்ரபுல் ரகீபுல் ஹசனுக்கு தலா ஒரு விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் வங்கதேசம் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்தியாவின் ரன் குவிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச வீரர்கள் அசத்தலாக ஆடினர்.
தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் சிறப்பாக ஆடி 151 ரன்களைக் குவித்து ஓய்ந்தார். ஜூனைத் சித்திக் 55 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் ஷஹாதத் (2), அஷ்ரபுல் (2) ஜோடி சேர்ந்து ஆடத் தொடங்கினர். இறுதியில், வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று வீழ்த்தப்பட்ட மூன்று விக்கெட்களையும் ஜாகிர் கானே அள்ளினார்.


Click it and Unblock the Notifications