ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தப்பித்தேன் பிழைத்தேன் கதையாக வென்றுள்ளது.
ஜெய்ப்பூரில் நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. இந்தியா முதலில் பேட் செய்தது.
முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விழவே இந்தியாவின் பெரும் ரன் குவிப்பு முயற்சி தடைபட்டது. இருப்பினும் ஷேவாக் (46), திணேஷ் கார்த்திக் (44), விராத் கோலி (31), டோணி (26) ஆகியோரால் இந்தியா ஓரளவுக்கு ரன் சேர்த்தது.
இந்திய அணியில் சதம் அடித்த ஒரே வீரரான சுரேஷ் ரெய்னா 58 ரன்களைச் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடி 22 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.
இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 298 ரன்களைச் சேர்த்தது. முன்னணி வீரர்கள் சற்று ஆட வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியா 300 ரன்களைத் தாண்ட உதவியாக இருந்திருக்கும்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கல்லிஸ் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவின் கல்லிஸ் அபாரமாக ஆடி 89 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்ளில் பர்னல்தான் இந்தியாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தினார். கடைசிக் கட்டத்தில் அவரும் ஸ்டெயினும் சேர்ந்து விளையாடி விதத்தைப் பார்த்தபோது இந்தியாவுக்கு வெற்றி கை கூடாதோ என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.
இருவரும் சேர்ந்து நிதானமாக வெற்றிப் புள்ளியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் ஸ்டெயினை 35 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீன் குமார் ஆட்டமிழக்கச் செய்தார்.
பர்னல் 48 ரன்கள் எடுத்த நிலையில் கடைசிப் பந்தைச் சந்தித்தார். அந்தப் பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பர்னல் அடித்து விட்டு ஓடி ஒரு ரன்னை எடுத்தார்.
அடுத்த ரன்னுக்கு முயற்சித்தபோது டோணியால் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியைத் தொட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
இந்திய அணித் தரப்பில் ஸ்ரீசாந்த், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பிரவீன் குமாருக்கும் 2 விக்கெட் கிடைத்தது.
சிறப்பாக பந்து வீசிய, பேட்டிங் செய்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அடுத்த ஒரு நாள் போட்டி 24ம் தேதி குவாலியரில் நடைபெறுகிறது.
3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.