பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்திய வாலிபால் அணி.. 40 ஆண்டு கால பதக்கக் கனவு கலைந்தது
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் வாலிபால் காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 0-3 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதன் மூலம் 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபால் பிரிவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் 40 ஆண்டு கால நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்ந்துள்ளது.
நகோயாவில் நடைபெற்ற இந்த அனல் பறக்கும் காலிறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் முதல் செட்டில் இரு அணிகளும் 4-4 என சமநிலையில் தொடங்கினாலும், பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமான திட்டமிடலுடன் செயல்பட்டு இந்தியாவின் முக்கிய வீரரான ஜெரோமின் தாக்குதல்களை தடுத்தனர். இந்திய வீரர்கள் அடுத்தடுத்து செய்த தவறுகளால் முதல் செட்டை 25-19 என்ற கணக்கில் பாகிஸ்தான் எளிதாகக் கைப்பற்றியது.

2வது செட்டில் நழுவிய வெற்றி வாய்ப்பு
2வது செட்டில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி அபாரமாக ஆடி ஒரு கட்டத்தில் 19-16 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தது. ஜோயல் பெஞ்சமின் களமிறங்கி தாக்குதலை பலப்படுத்தியதால் இந்தியா இந்த செட்டை வென்று சமநிலைக்கு கொண்டு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிக முக்கியமான அந்த கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தேவையற்ற தவறுகளை செய்தனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள் மின்னல் வேகத்தில் புள்ளிகளை குவித்து, 25-23 என்ற கணக்கில் 2வது செட்டையும் தட்டிச் சென்றனர்.
வெளியேறிய இந்தியா
முந்தைய ஆட்டத்தில் கத்தாருக்கு எதிராக 0-2 என பின்தங்கி பின்னர் 3-2 என அபாரமாக மீண்டு வந்ததைப் போல, இந்த ஆட்டத்திலும் இந்தியா மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 3வது செட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஆக்ரோஷமான ஸ்பைக்குகள் மூலம் புள்ளிகளை வாரிக்குவித்தனர். இந்திய அணியால் அவர்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் 3வது செட்டையும் 25-18 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் அணி, 3-0 (25-19, 25-23, 25-18) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்த இந்திய ஆடவர் வாலிபால் அணி, நாக்-அவுட் சுற்றில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


Click it and Unblock the Notifications


