துப்பாக்கி சுடுதல்: தமிழக வீராங்கனை இளவேனில் அபாரம்.. ஒரே நாளில் 3 தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!
புடியான் : சீனாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை 2019 போட்டிகளில் இந்தியா ஒரேநாளில் மூன்று தங்கத்தை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் சீனாவின் புடியானில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று ஒரே நாளில் நமது இளம் வீரர்கள் மனு பாக்கர், இளவேனில் வளரிவன், திவ்யான்ஷ் பன்வார் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இதையடுத்து பதக்கப்பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா மூன்று தங்கத்தை வென்றுள்ள நிலையில், சீனா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

17 வயதான பாக்கர் 10 மீட்டர் மகளிர் துப்பாக்கி சுடுதலில் ஜூனியர் பிரிவில் சாதனை புரிந்து தங்கத்தை வென்றுள்ளார். இவர் 244.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த நிலையில், இவருக்கு அடுத்தபடியாக செர்பியாவின் சோரானா அருணோவிக் வெள்ளிப் பதக்கத்தையும் சீனாவின் குவான் வாங் வெண்கலத்தையும் வென்றுள்ளனர்.
இதேபோல 20 வயது இளவேனில் 10 மீட்டர் பிரிவில் தங்கத்தை தட்டி சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் 632.2 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வெள்ளிப்பதக்கத்தை தைவானின் லின் யிங் சின் மற்றும் ரோமானியாவின் லாரா ஜியார்ஜெட்டா வெண்கலத்தையும் தட்டி சென்றுள்ளனர்.
இதனிடையே, ஆண்கள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் தங்கம் வென்றுள்ளார். அடுத்ததாக ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி வெள்ளியையும் செக்கோஸ்லோவாக்கியாவின் பாட்ரிக் ஜானி வெண்கலத்தையும் தட்டி சென்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதலில் தங்களது நிதானமான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்த இளைஞர்களின் சாதனை குறித்து பல்வேறு தரப்பினரும் பெருமை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications