என் மகள் அல்ல தேசத்தின் மகள்.. சாக்ஷி மாலிக்கின் தாயார் மகிழ்ச்சி + நெகிழ்ச்சி!
சட்டீஸ்கர்: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்துள்ளார். இந்த வெற்றியை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சாக்ஷியின் வீட்டிற்கு உறவினர்கள் படையெடுத்து வருவதால் அவர்களின் வீடு திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை "பிரீ ஸ்டைல்" பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த
இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.

தீர்ந்த தாகம்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக் பெற்ற வெண்கலப் பதக்கம், இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்ஷி தீர்த்து வைத்துள்ளது மகிழ்வுக்குரியது.
பெற்றோர் மகிழ்ச்சி
தனது மகள் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்த சாக்ஷியின் பெற்றோர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். துள்ளிக்குதித்தும் உற்சாகத்தில் கூக்குரல் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் மகள்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷியின் தாயார் சுதேஷ் மாலிக் , எனது மகள் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்தது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்தியாவின் பதக்க தாகத்தை தங்கள் மகள் தீர்த்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பெருமை சேர்த்த சாக்ஷி
ரியோ ஒலிம்பிக் 2016ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் சாக்ஷி பெற்றுள்ளார்.

வெண்கல மங்கை
2002ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications