Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டவுன் டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா-காலிஸ் தொடர் நாயகன்

கேப்டவுன்: கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியை கடுமையாக போராடி டிரா செய்து தோல்வியிலிருந்து தப்பித்தது இந்தியா. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஜேக்கஸ் காலிஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2வது போட்டியில் இந்தியா வென்றது. இதையடுத்து கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் விறுவிறுப்பானது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை தனது அபாரமான பந்து வீச்சால் 362 ரன்களில் நிறுத்தியது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா, சச்சினின் சிறப்பான சதத்தால் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பின்னர் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தது. ஆனால் காலிஸ் தனது அபாரமான ஆட்டம் மற்றும் சதத்தால், 341 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை கொண்டு போய் நிறுத்தி விட்டார்.

இதனால் மிகக் கடினமான வெற்றி இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்கோரை எடுப்பது சிரமம் என்பதால் டிராவை இலக்காக வைத்து ஆடத் தொடங்கியது இந்தியா. இதனால் விளையாடிய ஒவ்வொரு வீரரும் சரமாரியாக கட்டையைப் போடத் தொடங்கினர்.

இந்த கட்டையிலும் கம்பீர் ஒரு அரை சதத்தைப் போட்டுக் கொண்டார். 163 பந்துகளைச் சந்தித்த அவர் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் டிராவிட் 31 ரன்களை எடுத்தார். ஷேவாக் 11 ரன்களில் வீழ்ந்தார். கடைசியாக ஆடிய சச்சினும், லட்சுமணும் முடிந்தவரை கட்டையைப் போட்டனர். இதில் லட்சுமணன் சற்றே ஆடி 32 ரன்களை எடுத்தார். சச்சினோ, 91 பந்துகளைச் சந்தித்து 14 ரன்களை மட்டுமே எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிராதான் இலக்கு என்று இந்திய வீரர்கள் ஆடியது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இதனால் பந்து வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சோர்ந்து போய் விட்டனர்.

இறுதியில், ஆட்ட நேரம் முடிந்தபோது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்திருந்தது.

மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய காலிஸுக்கு தொடர் நாயகன் விருதும், 3வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

ஆட்ட நாயகன் விருதை காலிஸ் பெறுவது இது 22வது முறையாகும். இது ஒரு உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் அதிக ரன்களை விளாசியவரும் காலிஸ்தான். மொதாதம் 498 ரன்களை அவர் குவித்தார். இந்தியாவின் சச்சின் 326 ரன்களோடு 2வது இடத்தைப் பிடித்தார்.

3வது இடத்தில் ஹசிம் அம்லா (250), 4வது இடத்தில் கம்பீர் (242) ஆகியோர் உள்ளனர். 200 ரன்களைத் தாண்டிய மற்றொரு வீரர் டிவில்லியர்ஸ். இவர் 201 ரன்களை எடுத்திருந்தார்.

அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் முதலிடத்தை ஸ்டெயினும் (21), 2வது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் மார்னி மார்க்கலும், ஹர்பஜன் சிங்கும் பகிர்ந்து கொண்டனர். இருவரும் தலா 15 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். ஜாகிர் கான் 10 விக்கெட்களையும், ஸ்ரீசாந்த் 9 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

தொடர் டிராவில் முடிந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனையே. காரணம் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட்டில் கூட வென்றதில்லை. தற்போதுதான் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழக்காமல் டிரா செய்து தப்பித்துள்ளது.

இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இதுவரை மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளிலும், இந்தியா 7 போட்டிகளிலும் வென்றுள்ளன. 8 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.

Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+