கண்கவர் விழாவுடன் துவங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள்.. நாளை முதல் பலப்பரிட்சை
ஜகார்த்தா: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கின. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது.
நாளை முதல், ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்க் நகரங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.
இன்று மாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு பல நாட்டு வீரர்களின் அணி வகுப்புடன் விழா துவங்கியது. முன்னதாக, அரங்கிற்குள் பைக்கோடு உள்ளே நுழைந்து அசத்தினார், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விகோடோ. இதையடுத்து அகர வரிசைப்படி முதலில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் அணிவகுத்து வந்தது. இந்திய வீரர்கள் வந்தபோது, கைதட்டல் சத்தம் விண்ணை பிளந்தது. நீரஜ் சோப்ரா இந்திய தேசிய கொடியை ஏந்தி முனசென்றார்.

இதன்பிறகு, பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கையும் நடந்தன. இதன்பிறகு வண்ணமயமான வான வேடிக்கைகளுடன் விழா நிறைவடைந்தது.
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அதிக விளையாட்டுப் பிரிவுகள் கொண்ட மிக பிரம்மாண்டமான போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். ஏஷியாட் என்று அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள 45 நாடுகள் பங்கேற்கின்றன.
இதுவரை 17 முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளது. 18வது போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க் நகரங்களில் வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ளது.
40 வகையான விளையாட்டுகளில் நடத்தப்படும் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தியா இதுவரை அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. முதல் ஏஷியாட் 1951ல் டெல்லியில் நடந்தது. இதுவரை நடந்துள்ள 17 ஏஷியாட் போட்டிகளில் இந்தியா 139 தங்கம், 178 வெள்ளி, 299 வெண்கலம் என, 616 பதக்கங்களை வென்றுள்ளது.

அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 1,342 தங்கம் உள்பட 2,895 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 2,850 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள தென் கொரிய 2,063 பதக்கங்களை பெற்றுள்ளது. ஈரான் 159 தங்கத்துடன் 495 பதக்கம், கஜகஸ்தான் 140 தங்கத்துடன் 481 பதக்கங்களை வென்றுள்ளன.
2014ல் இன்சியானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களை வென்றது. இந்த முறை அதிக பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மிகவும் வலுவுடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர். கடந்த 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் குறைந்தபட்சம் 10 தங்கத்தை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications