ஸ்குவாஷ் உலக கோப்பையை முதல் முறையாக வென்றது இந்திய அணி.. சென்னையில் சரித்திர சாதனை
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலககோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் சீனாவை வீழ்த்தி இந்தியா புதிய வரலாறை படைத்தது. சென்னையில் அண்மையில் ஜூனியர் ஹாக்கி உலககோப்பை நடந்த நிலையில், தற்போது ஸ்குவாஷ் உலககோப்பையும் நடந்துள்ளது. இவ்விரண்டு தொடருக்கும், தமிழ்நாடு அரசே ஸ்பான்சர் செய்தது.
அனஹத் சிங் வெற்றிப் புள்ளியைப் பெற்று கோப்பையை உறுதி செய்தார். 2023ல் வெண்கலம் வென்ற பிறகு, இந்தியாவுக்கு இது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை ஆகும். இரண்டாம் நிலை அணியான இந்தியா, இந்த தொடரில் ஒரு போட்டியிலும் தோற்கவில்லை. லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசிலை தலா 4-0 என்ற கணக்கில் வென்றது.

பின்னர், கலப்பு அணிகள் போட்டியின் காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவையும், அரையிறுதியில் 2 முறை சாம்பியனான வென்ற எகிப்தையும் தலா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், நட்சத்திர வீராங்கனையும் தரவரிசையில் 79வது இடத்தில் இருந்த ஜோஷ்னா சின்னப்பா உலகத் தரவரிசை 37ல் உள்ள லீ கா யியை 3-1 (7-3, 2-7, 7-5, 7-1) என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் புள்ளியைப் பெற்றுக் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி ஆண்கள் ஒற்றையர் வீரரான அபய் சிங் 42வது தரவரிசையில் உள்ள அலெக்ஸ் லாவை 3-0 (7-1, 7-4, 7-4) என்ற நேர் செட் கணக்கில் 19 நிமிடங்களில் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா 2-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது.இதனை அடுத்து 17 வயதான அனஹத் சிங் களமிறங்கினார்.
உலகத் தரவரிசை 31ல் உள்ள டொமேட்டோ ஹோவை அனஹத் 16 நிமிடங்களில் 3-0 (7-2, 7-2, 7-5) என்ற கணக்கில் வென்று வெற்றியை உறுதி செய்தார். இதனால், ஆண்கள் தேசிய சாம்பியன் வெலவன் செந்தில்குமார், ஹென்றி லியுங்கை எதிர்கொள்ளும் நிலை ஏற்படவில்லை. இதன் மூலம் இந்தியாவுக்கு உலக கோப்பை கிடைத்தது.
இந்த வெற்றி குறித்து பேசிய அபய் சிங் "இது நம்பமுடியாத நாள், வேறு என்ன சொல்ல முடியும்? புகழ்பெற்ற எனது அணி வீரர்களுடன் இதனைச் செய்ய முடிந்தது ஒரு பாக்கியம். இந்த ஆண்டுக்கும், இந்த வாரத்திற்கும் இது ஒரு அற்புதமான முடிவு" என்றார்.ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரலாற்றில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, எகிப்து ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதுவரை ஐந்து முறை நடந்த இத்தொடர், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது. இதன் மூலம் விளையாட்டு உலகில் சென்னை முக்கிய கவனத்தை பெற்று வருகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications