வெள்ளி வென்ற சிந்து...வெண்கலம் வென்ற சாக்ஷி... லண்டன் ஒலிம்பிக்கில் சாதித்தவர்கள் யார்?
சென்னை: இந்தியாவே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த பிவி சிந்து ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நூலிழையில் தங்கப் பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி வெண்கலம் வென்றுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை பதக்கங்களை யார் யார் வென்றது என்பதை பார்ப்போம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று இந்தியா அதிகபட்சமாக 6 பதக்கங்களை வென்றது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ககன் நரங். துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஆடவர் பிரிவில் இவர் வெண்கலம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியாவை இடம் பெறச் செய்து சாதனை படைத்தார்.

விஜய்குமார்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் 25 மீட்டர் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

சாய்னா நெய்வால்
பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலத்தை வென்றார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நெய்வால். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மேலும் ஒலிம்பிக் போட்டியிலேயே பேட்மிண்டனில் வெற்றி பெற்று பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சாய்னா.

மேரிகோம்
பெண்கள் பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலத்தை வென்றார் மேரிகோம். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் வெற்றிக்கு குழந்தைகள் தடையில்லை என்பதை நிருபித்தார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகேஷ் தத்
ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் தத். 60 கிலோ ஆண்கள் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வட கொரிய வீர்ரான ரீ ஜங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை அடைந்தார்.

சுஷில்குமார்
டெல்லியைச் சேர்ந்தவர் சுஷில்குமார். 66 கிலோ எடை மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் 2008ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் முதன் முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications