ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.
இந்த தொடர் தொடங்கும் முன்பு, அவர்கள் இந்தோனேசியாவில் இருக்கும் நாட்களில் ஏற்படும் இதர செலவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 டாலர்கள் (கிட்டத்தட்ட 3450 ரூபாய்) வழங்க விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது வழக்கமான நடைமுறைதான். இதற்கு முன்பு நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போதும் தினசரி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த தொகையை வீரர்கள் இந்தோனேசியாவில் எடுத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு Forex Card (அந்நியச்செலாவணி பண அட்டை, ATM கார்டு போல) வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பணம் எதுவும் அந்த கார்டுகளுக்கு அனுப்பப்படவில்லை.
கிட்டதட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பாதி தூரத்தை கடந்துள்ளது. டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் வீரர்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்காமல் இருப்பது வீரர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வீரர்கள், பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களிடம் உள்ள பணத்தை கொண்டு சமாளித்துக் கொள்வார்கள். ஆனால், முதல் முறையாக இது போன்ற ஒரு வெளிநாட்டுத் தொடரில் பங்கேற்கும் இளம் வீரர்கள், வசதி வாய்ப்பு குறைவான பின்னணியில் இருந்து வந்த வீரர்கள் தான் சிரமத்தில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
இது பற்றி பேசிய ஒரு இந்திய வீரர், "அனைத்து தேவைகளையும் நாங்கள் ஆசிய போட்டி கிராமத்திலேயே தீர்த்துக் கொள்ள முடியும். எனினும், சில சூழ்நிலைகளில் பணம் தேவைப்படும். என் கருத்து என்னவென்றால், நீங்கள் பணம் தரப் போகிறீர்கள் என்றால் அதை தொடர் ஆரம்பிக்கும் முன்பே ஏன் கொடுக்கக்கூடாது? பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் கிளம்பிவிட்டார்கள். எனவே, அந்த கார்டில் இப்போது பணம் போட்டு என்ன ஆகப் போகிறது?" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்தோனேசியாவில் வீரர்களோடு சென்ற ஒரு அதிகாரி இது தொடர்பாக தான் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் அமைப்பிடம் பேசி இருப்பதாகவும், விரைவில் பணம் அனுப்பப்படும் என்றும் கூறினார்.
காசு எடுக்க கார்டு கொடுக்கணும்னு தெரிஞ்ச உங்களுக்கு...அதுல பணம் போடணும்னு தெரியாம போச்சே.