ஒரு பதக்கமும் இல்லையே...ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தொடரும் தடுமாற்றம்
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸில் இன்னும் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், தடகளத்திலும் இந்திய அணியின் தடுமாற்றம் தொடர்கிறது.
ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் வழக்கம் போல இந்தியா தடுமாற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதலில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் இந்திய வீரர் விகாஸ் கவுடா. தற்போது ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட விகாஸ் கவுடா மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், 35 பேர் கலந்து கொண்ட இந்த தகுதி சுற்றில் விகாஸ் கவுடா 58.99 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 28-வது இடமே பிடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார்.

இதேபோல் பெண்களுக்கான குண்டு எறிதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் கலந்து கொண்டு விளையாடினார். 17.06 மீட்டர் தூரம் எறிந்த அவர் 23-வது இடத்தையே பிடித்தார். இதனால், அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார். இந்த தகுதி சுற்றில் 36 பேர் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் கலந்து கொண்டார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 47.27 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தாம் பங்கேற்ற பிரிவில் 5-வது இடத்தைப் பிடித்தார்.இதனால், அவர் அரைஇறுதி வாய்ப்பை எட்டிப்பிடிக்க முடியாமல் வெளியேறினார். ஒட்டுமொத்தமாக ஜின்சன் ஜான்சனுக்கு 25-வது இடம் பிடித்தார்.


Click it and Unblock the Notifications