ரியோ ஒலிம்பிக்.. வட்டு எறிதலில் கிருஷ்ண பூனியாவின் கனவு தகர்ந்தது!
டெல்லி: இந்திய தடகள வீராங்கனையான கிருஷ்ணா பூனியா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் வட்டு எறிதலில் 34 வயதான இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா கலந்து கொண்டார்.

இதில் அவர் 57.10 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 61 மீட் டர் தூரம் எறிய வேண்டும். எனவே, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அவர் இழந்தார்.
காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பூனியா, 2012ம் ஆண்டு 64.76 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தேசிய சாதனையையும் படைத்தவர். மத்திய அரசின் ஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 2 மாதங்கள் பயிற்சி பெற்ற பூனியா, 59.49 மீட்டர் தூரம் வரை வட்டு எறியும் திறனுடன்தான் அமெரிக்க தடகள போட்டியில் கலந்து கொண்டார்.
ஆனால், இம்முறை அவரால் 57.10 மீட்டர் தூரம் மட்டுமே அவரால் வட்டு எறிய முடிந்தது. இதனால் அவரது ரியோ ஒலிம்பிக் கனவு கை நழுவிப் போனது.
இது குறித்து பூனியா கூறுகையில், "ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் கடைசியில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டேன். மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் பயிற்சிகளில் ஈடுபட எனக்கு அதிக அளவு நேரம் கிடைக்கவில்லை. எனது பயிற் சிக்கும், அமெரிக்க போட்டியில் கலந்து கொள்ள உதவியாக இருந்த விளையாட்டு துறை அமைச்சகத்துக்கும், சாய் அமைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2004, 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பூனியா பங்கேற்றுள்ளார். இதில் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார். இதன் மூலம் தடகளத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் பூனியாவால் 6-வது இடம் தான் பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications