முரட்டு மோதலுக்கு தயாராகிறார் இந்தியாவின் கவிதா தேவி.. !
மும்பை : இந்தியாவில் தற்போது விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள WWE வீரர் பிரான் ஸ்ட்ரோமன், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள “மே யங் கிளாசிக்” என்ற பெண்களுக்கான தொழில்முறை ரெஸ்லிங் தொடரில் இந்தியப் பெண்ணான கவிதா தேவி கலந்து கொள்ள உள்ளார், என தெரிவித்தார்.
WWE தொழில்முறை ரெஸ்லிங்கில் சேர்ந்த முதல் இந்தியப் பெண், கவிதா தேவி ஆவார். சில ஆண்டுகளாக ரெஸ்லிங் பயிற்சி பெற்று வந்த கவிதா தேவியின் திறமையை கண்ட WWE, அவருக்கு பயிற்சி அளித்து தன் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளித்து வருகிறது. ஏற்கனவே சில போட்டிகளில் பங்கேற்ற கவிதா தேவி, தற்போது அடுத்தமாதம் நடைபெற உள்ள பெண்களுக்கான “மே யங் கிளாசிக்” தொடரில் கலந்து கொண்டு சண்டையிட உள்ளார்.

மொத்தம் 32 பெண்கள் இந்த தொடரில் பங்கு பெறுவார்கள். பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இந்த போட்டியில் சண்டையிட இருக்கிறார்கள். இந்த தொடர் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து போட்டிகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் சண்டையிட்டால், கவிதா தேவி முக்கியமான WWE நிகழ்ச்சிகளான “மன்டே நைட் ரா” மற்றும் “ஸ்மேக்டவுன்” ஆகியவற்றில் நுழைவார். ஏற்கனவே, கவிதா தேவி சண்டையிடும் வீடியோக்கள் யூட்யூப்-இல் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் WWE நிகழ்ச்சிகளை பிரபலமாக்கும் வகையில், அவ்வப்போது சில வீரர்கள் இங்கே வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது, “மான்ஸ்டர்” என்று அழைக்கப்படும் WWE வீரர் பிரான் ஸ்ட்ரோமன் இந்தியா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இந்த தகவலை வெளியிட்டார்.
WWE-ஐ பொறுத்தவரை, இந்தியா அதிக பார்வையாளர்களை கொண்ட நாடு. ஆனாலும், இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையே உள்ளது. அதை ஈடுகட்டும் வகையில், இந்தியா சார்பில் கிரேட் காளி, ஜிண்டர் மஹால் போன்ற சில இந்திய வீரர்களை தன் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்தியப் பெண்ணான கவிதா தேவியும் முக்கிய தொடர்களில் இனி பங்கேற்பார் என தெரிகிறது.
Story first published: Sunday, July 22, 2018, 14:41 [IST]
Other articles published on Jul 22, 2018


Click it and Unblock the Notifications