ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. சீன தைபேயிடம் தோல்வி.. இந்தியா ஹேண்ட்பால் அணி சோகம்!
ஜகார்த்தா: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஹேண்ட்பால் பிரிவில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 28-38 என்ற கணக்கில் சீன தைபேயிடம் தோல்வியடைந்தது.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வரும் 18ம் தேதி துவக்க உள்ளது. அதே நேரத்தில் ஹேண்ட்பால், கால்பந்து போன்ற பிரிவுகளில் போட்டிகள் துவங்கியுள்ளது.

இதில் ஆடவர் ஹேண்ட்பாலில் டி பிரிவில் சீன தைபே, பிரிட்டன் மற்றும் ஈரான் அணிகளுடன் இந்தியா உள்ளது. மொத்தம் 13 நாடுகள் இந்தப் பிரிவில் விளையாடுகின்றன.
ஆடவர் தரவரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் தரவரிசையில் 8வது இடத்தில் தான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அணிகளை அனுப்புவது என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய ஆடவர் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், ஓமன், சீனா, யுஏஇ ஆகியவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகின.
அதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகளில், தரவரிசையில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என ஹேண்ட்பால் சங்கம் கோரியது. நீதிமன்ற தலையீட்டில் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், சீன தைபேயும் மோதின. இதில் 28-38 என்ற புள்ளிகள் அடிப்படையில் இந்தியா தோல்வியடைந்தது. அதனால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற, அடுத்த இரண்டு ஆட்டங்களில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இதனிடையில் 10 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹேண்ட்பால் போட்டியில் தென்கொரியா, கஜகஸ்தான், சீனா, வடகொரியா ஆகியவற்றுடன் ஏ பிரிவில் இந்தியா உள்ளது. இந்தியா நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் கஜகஸ்தானை சந்திக்கிறது.


Click it and Unblock the Notifications