ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்!
டெல்லி : இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் திங்கள் அன்று காலை காலமானார்.
Recommended Video
மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணியில் ஆடியவர் பல்பீர் சிங். இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பதவியிலும், பின்னர் ஒரு முறை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

அவருக்கு 96 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக கடும் உடல் நலக் குறைபாடால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மே 18 முதல் அவர் பாதி கோமாவில் இருந்தார். முதலில் நிமோனியா காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டது. இந்த சிகிச்சையின் இடையே அவருக்கு மூன்று முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் திங்கள் அன்று காலையில் மரணம் அடைந்தார்.
திங்கள்கிழமை அன்று காலை 6.30 மணி அளவில் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்வு செய்த 16 ஜாம்பவான் வீரர்களில் பல்பீர் சிங் மட்டுமே ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பதால் இந்த அங்கீகாரத்தை அவர் பெற்றார்.
1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வென்று இருந்தார். 1952இல் இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனாகவும், 1956இல் கேப்டனாகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1957இல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து கௌரவித்தது இந்திய அரசு.
பின்னர் 1975இல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவர் இருந்த போது தான் இந்தியா தன் முதல் ஹாக்கி உலகக்கோப்பையை வென்றது. அதன் பின் இப்போது வரை உலகக்கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்பீர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுக்களை சேர்ந்த வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications