ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆடவர் வாலிபால் அணி பலம் வாய்ந்த தென் கொரியாவை வீழ்த்தி அசரடித்துள்ளது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட தொடக்க நிலை ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வாலிபால் பிரிவில் இந்திய ஆடவர் அணி நேற்றைய ஆட்டத்தில் கம்போடியா அணியை வீழ்த்தி அசத்தியது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் தென் கொரியாவை இந்தியா எதிர்கொண்டது. இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் வாலிபால் பிரிவில் ஜப்பான் அணி 16 முறையும், சீனா 11 முறையும், தென் கொரியா 3 முறையும் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் தென் கொரியா 4வது இடத்திலும், இந்தியா 19வது இடத்திலும் உள்ளன.
அதேபோல் தென் கொரியாவை எதிர்த்து இந்தியா ஆடிய கடைசி 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் சுற்றில் தென் கொரியா அணி 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியின் அஷ்வல் ராய் செய்த தவறான ஜம்ப் காரணமாக முதல் செட்டை இந்தியா இழந்தது.
ஆனால் வீழ்ந்த வேகத்தில் எழுந்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து இரு செட்களையும் கைப்பற்றி அசத்தினர். இரண்டாவது செட்டை 29-27 என்றும், மூன்றாவது செட்டை 25-22 என்றும் கைப்பற்றினர். இதன் மூலம் ஆட்டத்தில் 2-1 என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 4வது செட்டை தென் கொரியா அணி 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இதனால் கடைசி செட் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5வது செட் ஆட்டத்தில் இந்தியா 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்ததுய். ஆனால் தென் கொரியாவின் அட்டாக்கில் தடுமாறிய இந்திய வீரர்கள், அடுத்தடுத்து புள்ளிகளை இழந்தனர். இதனால் ஆட்டத்தில் தென் கொரியா அணி 15-14 என்று முன்னிலை பெற்றது. ஆனால் இந்திய அணியின் மனோஜ் அடுத்தடுத்து 2 புள்ளிகளை பெற்றுக் கொடுக்க, கடைசியாக எரின் வர்கீஸ் வெற்றிப் புள்ளியை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 17-15 என்ற புள்ளிக் கணக்கில் 5வது செட்டை கைப்பற்றியது.
இதன் மூலம் பலம் வாய்ந்த தென் கொரியா அணியை இந்தியா அணி வீழ்த்தி ஷாக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி டாப் 12 சுற்றுக்குள் கால் பதித்துள்ளது. அதேபோல் பூல் சி பிரிவில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.