பாராலிம்பிக்ஸ் போட்டியில் சோகம்... சைக்கிளிங்கில் பங்கேற்ற ஈரான் வீரர் ஹார்ட் அட்டாக்கில் மரணம்
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் சைக்கிளிங் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பஹ்மான் என்ற வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான சி4/சி5 சைக்கிளிங் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்பிராஸ் பஹ்மான் கோல்பர்நிஜாத் என்ற வீரருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போட்டியின் போது நடந்த இந்த சோக சம்பவத்தால் மற்ற வீரர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பஹ்மானின் மரணத்திற்கு தேசிய பாராலிம்பிக் கமிட்டி உள்பட விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஈரான் நாட்டு கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
48 வயதான பஹ்மானுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications